ADDED : மார் 30, 2025 11:13 PM
லாரி மோதி முதியவர் பலி
கோவை, சிங்காநல்லுார் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம், 75. திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட மகாலிங்கம் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவிக்குப் பின், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம், சாமளாபுரத்தை சேர்ந்த சம்பத், 55 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சாணி பவுடர் விற்றவர் கைது
கோவை, பீளமேடு போலீசார் ஆவாரம்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில், மஞ்சள் நிற சாணிப்பவுடரை விதிமீறி விற்பனை செய்வது தெரிந்தது. கடை உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், 49 என்பவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். தொடர்ந்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
புது வீட்டில் திருட்டு
கோவை பீளமேடு, பாரதி காலனியை சேர்ந்தவர் சக்திவேல், 65. இவர் வேட்டைக்காரன் கோவில் தோட்டம் பகுதியில், புதிதாக வீடு கட்டினார். கடந்த, 10ம் தேதி புதுமனை புகுவிழா நடத்தினார். தொடர்ந்து, வீட்டில் மீதமிருந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த, 27ம் தேதி வீட்டை பூட்டிச் சென்றார். 28ம் தேதி காலை, 7:30 மணிக்கு புது வீட்டுக்கு சென்ற போது, மர்மநபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த வெள்ளித்தட்டு, உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரிந்தது. சக்திவேல் அளித்த புகாரின் பேரில், துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.