ADDED : ஏப் 05, 2025 11:27 PM
பணம், ஏ.டி.எம். கார்டு திருட்டு
புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 60. 'வாக்கிங்' செல்வதற்காக ரேஸ்கோர்ஸ் சென்றார். அப்போது, ஸ்கூட்டரை அதே பகுதியில் நிறுத்தி விட்டு சென்றார். ஸ்கூட்டர் சீட்டின் கீழ் பணம், ரூ. 5000 மற்றும் ஏ.டி.எம்., கார்டு வைத்திருந்தார். வாக்கிங் சென்று முடித்து திரும்பி வந்து பார்த்த போது, சீட்டின் அடியில் வைத்திருந்த பணம் மற்றும் ஏ.டி.எம்., கார்டு மாயமாகியிருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
அண்ணா சாலை, ஆடிஸ் வீதியை சேர்ந்தவர் ராமசாமி, 80; போத்தனுாரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்தார். ராமசாமியுடன் பணியாற்றி வந்த மணி, 57 என்பவர் காப்பகம் சென்று, அவ்வப்போது அவரை சந்தித்து பேசி வந்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு துாங்க சென்ற ராமசாமி, அறையில் இருந்த ஜன்னலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காப்பகத்தில் இருப்போர், சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.
கார் மோதி பாதசாரி பலி
நேற்று முன்தினம் ஒண்டிப்புதுார் மேம்பாலம் அருகில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவருக்கு, பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.