ADDED : ஏப் 14, 2025 06:42 AM
பீர் பாட்டில் காட்டி பணம் பறிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்தவர் கோபிநாதன், 38. கோவை குனியமுத்துாரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், பாலக்காடு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் பீர்பாட்டிலை காட்டி, கோபிநாதனை மிரட்டி பணம் கேட்டார். கோபிநாதன் சத்தமிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், அங்கு வந்த அந்நபரை பிடித்து, குனியமுத்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் குனியமுத்துார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முகமதுசேக், 24 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
மாணவர்கள் அறையில் திருட்டு
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சமீர், 30. அங்கு தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். கடந்த, 11ம் தேதி விடுதியின் கதவை பூட்டாமல் வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது, அறையில் இருந்த, ஐந்து மொபைல்போன்கள், இரு லேப்டாப்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அவர் அளித்த புகாரின் படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
கோவை, கள்ளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் காதர்மொய்தீன், 44. ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் ஆட்டோவில், மருதமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று மோதியது. இதில் காதர்மொய்தீன் துாக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சரக்கு வாகன டிரைவர் சின்னமத்தம்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார், 32 என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கேட்பாரற்று கிடந்த கஞ்சா
கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், ரயில்களில் கஞ்சா கடத்தி வருவது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் 1 'ஏ' அருகில், பொட்டலம் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதை கைப்பற்றி சோதனை செய்த போது, 1.190 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அதைப் போட்டு சென்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

