ADDED : ஏப் 17, 2025 07:19 AM
வழிப்பறி வாலிபர் கைது
காளப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்தவர் அஜய், 35; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த நபர் ஒருவர் திடீரென அஜயிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். அஜய் பணம் தர மறுத்ததால், அவரை கழுத்தில் வைத்து, அவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துள்ளார். தொடர்ந்து, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றித் தருமாறு கேட்டார். அஜய் சத்தம் போட, அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் குறித்து அஜய் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சய், 22 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஷட்டரை உடைத்து திருட்டு
பேரூரை சேர்ந்தவர் தனலட்சுமி, 35; சின்னவேடம்பட்டி பகுதியில் காப்பர் ஒயர் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு, கம்பெனியை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்த போது, 'ஷட்டர்' உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைத்திருந்த ரூ. 1 லட்சம் மற்றும் 48 கிலோ காப்பர் ஒயர் திருட்டு போயிருந்தது. தனலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவருக்கு சிறை
மாநகர பகுதிகளில் குட்கா உள்ளிட்ட, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெரிய கடைவீதி போலீசார் உக்கடம் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, தெற்கு உக்கடம் பகுதியில் ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பதுக்கிய தெற்கு உக்கடம், ஜி.எம்.நகரை சேர்ந்த அனிஷ் ராஜா, 32 என்பரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.