ADDED : மே 12, 2025 12:27 AM
கோஷ்டி மோதலில் 10 பேர் கைது
கே.கே.புதுார், நாகம்மாள் வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன், 26; இவரது நண்பர் சந்தோஷ்குமார், 26. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இம்ரான், 26 என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன், கார் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி ஹரிஹரன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் என்.எஸ்.ஆர்., ரோட்டில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இம்ரான் மற்றும் அவரது நண்பர்கள், ஹரிஹரன், சந்தோஷ் குமாரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.
பதிலுக்கு ஹரிஹரன் மற்றும் சந்தோஷ்குமார், தனது நண்பர்கள் 3 பேரை அழைத்துக் கொண்டு வந்து இம்ரானை தாக்கினர். சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் விசாரித்து, இம்ரான், 36, சூரியா தினேஷ், 21, நிகல், 21, முகமது பரூக், 30, சையது அஸ்மத், 21, ஹரிஹரன்,26, சந்தோஷ்குமார், 26, தவுபிக், 24, சாய் சிதார்த், 23, பரத், 23 ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
டிரைவரை தாக்கிய இருவருக்கு சிறை
பீளமேட்டை சேர்ந்தவர் ஜோதிகுமார், 50; டிரைவர். கடந்த 8ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஜோதிகுமார் மீது மோதினர். இதில், ஜோதிகுமார் கீழே விழுந்தார். தொடர்ந்து அவர்கள் இருவரும், ஜோதிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பலத்த காயமடைந்த ஜோதிகுமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜோதிகுமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோதிகுமாரை தாக்கிய விருதுநகரை சேர்ந்த ஜெயகுமார், 28 மற்றும் பீளமேட்டை சேர்ந்த மரிய செல்வம், 23 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இளைஞர் தற்கொலை
பூசாரிபாளையம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் கவுதம், 21. தாய், தந்தை உயிரிழந்த நிலையில், உறவினரான சண்முகம், 65 என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, துாங்க செல்வதாக கூறி அறைக்குள் சென்றார். நேற்று காலையில் அறைக்குள் சென்று பார்த்த போது, அவர் துாக்கில் தொங்கிய படி சடலமாக காணப்பட்டார். சண்முகம் செல்வபுரம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சட்ட விரோத மது விற்பனை
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம், காலை 8:30 மணியளவில் மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன், 42 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மது பாட்டில்கள், ரூ. 6,430 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மணிகண்டனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பார் ஊழியர்கள் மீது வழக்கு
இடையர்பாளையம், அன்பு நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 36. பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் துடியலுார், கே.என்.ஜி.புதுார் பகுதியில் உள்ள பாருக்கு மது குடிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக, பிரபாகரன் கைப்பட்டு, மது பாட்டில் ஒன்று உடைந்தது. பார் ஊழியர் ஒருவர், பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பாரில் பணியாற்றும் 15 ஊழியர்கள் இணைந்து, பிரபாகரனை தாக்கினர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனைவி ஜோதி, துடியலுார் போலீசில் புகார் அளிக்க, போலீசார் பார் ஊழியர்கள் 15 பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புகை பிடித்தவர்கள் மீது வழக்கு
சாய்பாபாகாலனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பி.என்.புதுாரில் வடவள்ளியை சேர்ந்த ஜெகன், 42; என்.எஸ்.ஆர்., ரோட்டில், சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆண்டியப்பன், 67 மற்றும் தடாகம் சாலையில், வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், 62 ஆகியோர் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, பொது இடத்தில் புகைபிடித்துக்கொண்டிருந்தனர். போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பொது இடத்தில் புகைபிடிக்கக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பினர்.
ஆன்லைன் லாட்டரி விற்பனை
சாய்பாபா காலனி பகுதியில், ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது, வேலாண்டிபாளையம், மருதகோனார் வீதியில் ராஜேஷ் கண்ணா, 45 என்பவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய மொபைலை, பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.