ADDED : மே 22, 2025 01:04 AM
லாட்டரி விற்றவர் கைது
ஆர்.எஸ்.புரம் போலீசார், மருமதலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பி.என்.புதுார் பகுதியில் உள்ள பேக்கரி அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அவரிடம் கேரளா லாட்டரி டிக்கெட் இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, அவர் பி.என்.புதுாரை சேர்ந்த பாலன், 55 என்பதும், அவர் கேரளா லாட்டரி டிக்கெட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்த 193 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
வழிப்பறி; மூவர் சிறை
காந்திபுரம், 100 அடி ரோட்டில் செயல்பட்டு வரும் உணவகத்தில், காரைக்குடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி 100 அடி ரோடு 7வது வீதியில் கடைக்கு சென்றிருந்த போது, அங்கு வந்த மூவர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். கிருஷ்ணமூர்த்தி கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து, ரூ.320 பணத்தை பறித்துச் சென்றனர். கிருஷ்ணமூர்த்தி காட்டூர் போலீசில் அளித்த புகாரில் போலீசார், திருவாரூரை சேர்ந்த ராஜ்குமார், 33, நீலகிரியை சேர்ந்த நெல்சன் விஜய் மற்றும் திவாகர், 25 ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மது விற்றவர் கைது
மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காலை 7:15 மணிக்கு சங்கனுார் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, கடை திறக்கும் முன்பே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 114 மது பாட்டில்கள், ரூ.5,350 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கோவைப்புதுாரை சேர்ந்த குமார், 50 என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.