ADDED : ஜூன் 13, 2025 11:14 PM
காப்பகத்தில் மூதாட்டிகள் பலி
கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சுப்புலட்சமி, 70 என்பவர் இருந்தார். நேற்று முன்தினம் மதியம், சுப்புலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சுப்புலட்சுமி இறந்து ஒரு மணி நேரத்திற்குள் அதே காப்பகத்தில் இருந்த கமலம்மாள் என்பவருக்கும், உடல் நிலை சரியில்லாமல் போனது. அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
தொழிலாளியை மிரட்டியவர்கள் கைது
கே.கே.புதுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 44; தொழிலாளி. இவர், கடந்த 10ம் தேதி சாய்பாபா காலனி, கோவில் மேடு, ஒரு மரத்தடியில் நின்றிருந்தார். அங்கு வந்த 2 பேர், விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். விஜயகுமார் அவர்களை கண்டித்த போது, ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், விஜயகுமாரின் கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டினர். விஜயகுமார் சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். விஜயகுமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பணம் கேட்டு மிரட்டியது, சாய்பாபா காலனி அண்ணா நகரை சேர்ந்த ரஞ்சித், 40, கோவில்மேட்டை சேர்ந்த பெலிக்ஸ், 25 ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வழிப்பறி வாலிபர் கைது
பி.என்.பாளையத்தை சேர்ந்த பிரேம் ஆனந்த், 40 அதே பகுதியில் உள்ள ஒரு கோவில் முன் நின்று மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பிரேம் ஆனந்திடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். பிரேம் ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் பேரூர், செட்டிபாளையத்தை சேர்ந்த ராகுல், 25 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாலிபரை தாக்கியவர் கைது
வெள்ளலுார், அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிஹரன், 22. இவரது நண்பரான தமோதரன் என்பவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு, கடந்த 5ம் தேதி, மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஹரிஹரன் தமோதரனுக்கு ஆதரவாக சென்று சிறுவனை தாக்கினார். இதையடுத்து, கடந்த 11ம் தேதி ஹரிஹரன் ராமநாதபுரம், பங்கஜா மில் ரோட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் மற்றும் அவரது நண்பரான வினோத், 25 ஆகியோர் சேர்ந்து ஹரிஹரனை தாக்கினர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிக்பாக்கெட் அடித்தவர் கைது
செல்வபுரம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஷாஜகான், 47; அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மருத்துவமனை வளாகத்தில் இருந்த போது, வாலிபர் ஒருவர் அவர் மீது மோதி சென்றார். அவர் மோதி சென்ற பிறகு, ஷாஜகான் தனது பாக்கெட்டை பரிசோதித்து பார்த்த போது, பாக்கெட்டில் இருந்த ரூ. 500 காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், அந்த வாலிபரை ஷாஜகான் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்ததில் பிக்பாக்கெட் அடித்தது ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிஸ், 25 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல்
சாய்பாபா காலனியை சேர்ந்தவர் வினோத், 38. இவரது பக்கத்து வீட்டில் மோகன்ராஜ், 30 என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே சிறு சிறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், கடந்த 9ம் தேதி வினோத் மற்றும் மோகன்ராஜ், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மோகன்ராஜுடன் அதே பகுதியை சேர்ந்த பரத், 26, பரத் குமார், 23 ஆகியோர் இருந்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மூவரும் சேர்ந்து வினோத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். சம்பவம் குறித்து வினோத் அளித்த புகாரில் போலீசார் மோகன்ராஜ், பரத், பரத் குமார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.