ADDED : ஜூன் 24, 2025 11:04 PM
மொபைல் பறித்த இருவர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கவிராஜ், 29; அவிநாசி சாலை, முதலிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 23ம் தேதி கவிராஜ், பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவை வந்தார். உக்கடத்தில் இறங்கி முதலிபாளையம் செல்ல தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது, இருவர் கவிராஜ் பாக்கெட்டில் இருந்த மொபைலை பறித்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், கவிராஜ் அருகில் இருந்தவர்களின் உதவியோடு, இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மொபைல் பறித்தது, ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த பாண்டி ஜகாராவ், 20 மற்றும் அலுவா வெங்கடேஷ், 19 ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
நின்றிருந்த லாரியில் மோதி பலி
சாய்பாபா காலனி, கே.கே.புதுாரை சேர்ந்தவர் அகில், 24. இவர் தனது இருசக்கர வாகனத்தில் காந்திபுரம், 100 அடி ரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில், டீசல் இல்லாமல் சாலை ஓரத்தில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எந்த எச்சரிக்கையும் இல்லாமல் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், எதிர்பாராத விதமாக அகில் லாரியின் பின்புறத்தில் மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சேவல் சண்டை; ஆறு பேர் கைது
நஞ்சுண்டாபுரம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் போலீசார் நஞ்சுண்டாபுரம் பொகலேரி தோப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு சிலர், சேவல்கள் வைத்து சண்டை நடத்திக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த சங்கர், 36, புல்லுக்காட்டை சேர்ந்த விஜய், 30, சங்கர், 35, நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தத பாலாஜி, 24 மற்றும் விக்னேஷ், 29 என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 5 சேவல்கள், ரூ. 2,350 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.