ADDED : ஜூலை 09, 2025 10:46 PM
வெள்ளி வளையல் திருட்டு
வடமதுரை, ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் திலீப் குமார், 32. இவர் கடந்த 5ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான உடுமலைக்கு சென்றார். கடந்த 7ம் தேதி அவர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வெள்ளி வளையல்கள் திருட்டு போயிருந்தது. அவர் துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரிக்கின்றனர்.
மது குடித்தவர் பலி
ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்தவர் லாலு யாதவ், 31; கோவையில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வருகிறார். லாலு தினமும் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதை பழக்கமாக வைத்திருந்தார். கடந்த 7ம் தேதி தனது நண்பரான சிவகுமார் சிங், 37 என்பவருடன் சேர்ந்து மது குடிக்க சென்றார்.
மதுபோதையில் இருவரும் வீட்டுக்கு வந்து துாங்கினார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல, வேலைக்கு செல்ல, சிவக்குமார் சிங் எழுந்தார். வெகு நேரமாகியும் லாலு யாதவ் எழாததால், சந்தேகம் அடைந்த சிவக்குமார் சிங், அவரை எழுப்பினார். அசைவின்றி கிடந்ததால், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சூதாட்டம் ; ஏழு பேர் மீது வழக்கு
இருகூர் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இருகூர், சண்முகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றனர். அங்கு மொட்டை மாடியில் ஏழு பேர், பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். சீட்டு விளையாடிக்கொண்டிருந்த ஒண்டிப்புதுாரை சேர்ந்த இருளப்பா பாண்டியன், 37, பார்த்திபன், 33, சிவசாமி, 47, நல்லேந்திரன், 30, புலியகுளத்தை சேர்ந்த சம்புதீன், 62, இருகூரை சேர்ந்த தனகோவிந்தன், 46 மற்றும் உப்பிலிபாளையத்தை சேர்ந்த பூபதி, 48 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், ரூ. 4970 பணம் ஆகியவற்றை, பறிமுதல் செய்தனர்.