ADDED : ஜூலை 12, 2025 01:00 AM
தவறி விழுந்த தொழிலாளி
ராம்நகர், படேல் ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், 22; கட்டட தொழிலாளி. இவர் கடந்த 7ம் தேதி தெலுங்கு வீதியில் ஒரு கட்டடத்தில், வேலை செய்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியமர்த்தியதாக, கட்டட கான்ட்ராக்டர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தாய், சகோதரி மீது தாக்கு
செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் தீபா, 42. இவருக்கு திருமணமாகி நான்கு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். தீபாவின் இரண்டாம் மகன் பூந்தமிழன் மொபைல் பார்த்துக்கொண்டிருந்த போது, தீபாவின் மற்றொரு மகன் பாலமுருகன் மொபைல் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், பாலமுருகனை தாக்கினார். இதைப்பார்த்த தீபா மற்றும் அவரது மகள் சிவசக்தி ஆகியோர் தடுத்தனர். அப்போது, பூந்தமிழன் அவர்களை செங்கலால் தாக்கினார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். செல்வபுரம் போலீசில் தீபா அளித்த புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மொபைல் பறித்தவருக்கு சிறை
உக்கடம், ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது, 70. இவர் மருந்து வாங்குவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாகுல் அமீது, சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைலை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். சாகுல் அமீது உக்கடம் போலீசில் அளித்த புகாரில், போலீசார் விசாரணை நடத்தி, ரத்தினபுரியை சேர்ந்த விக்னேஷ், 30 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.