ADDED : ஜூலை 15, 2025 08:55 PM
பெண் மீது தாக்குதல்
கோவை, சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா, 31. இவரது சகோதரர் பழனிச்சாமி. இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கை வாபஸ் பெற சந்திராவிடம், பழனிச்சாமி வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் வழக்கை வாபஸ் பெறவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் சந்திரா வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர் அங்கு இருந்த வீட்டு கண்ணாடியை உடைத்து, சந்திராவை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தொழில் அதிபருக்கு மிரட்டல்
கோவை, சாய்பாபா கோவில் அருகே உள்ள சித்தி விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம், 56. கட்டுமான தொழில் அதிபர். சாய்பாபா காலனி, பாரதி பார்க்கில், ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் அருண்குமார் என்பவர் பங்குதாரராக இருந்தார். அதன் பின் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் பிரிந்தார். இந்நிலையில், அருண்குமார் அவரது அலுவலகத்துக்குள் புகுந்து சுப்ரமணியம் மற்றும் அங்கு இருந்த பெண் ஊழியர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மனைவி பிரிந்தார்; கணவர் தற்கொலை
கோவை குறிச்சி காந்திநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார், 30. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி இரு ஆண்டுகளான நிலையில், குழந்தை இல்லை. இதனால் விரக்தியடைந்த அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மனோஜ்குமார், நேற்று முன் தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.