மூன்று பேர் ரூ.50 லட்சம் மோசடி
கோவை: ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் கிளமென்ட் இளங்கோ, 60. இவர், 2018ம் ஆண்டு தனது மகள் வர்ஷினிக்கு, வேலுாரில் உள்ள மருத்துவ கல்லுாரி மற்றும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்தார்.
அதை தெரிந்து கொண்ட, கோவை சிட்ராவை சேர்ந்த இப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் செந்தில்குமார், ஷர்மிளா ஆகியோர் அவரை தொடர்பு கொண்டு, ரூ.50 லட்சம் கொடுத்தால் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பி கிளமென்ட் இளங்கோ, ரூ.50 லட்சம் கொடுத்தார். ஆனால், அவர்கள் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்தனர். கிளமென்ட் இளங்கோ கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், புகார் அளித்தார். பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். கோவை சிட்ராவை சேர்ந்த இபிரின் என்கிற பிரபு, 40, செந்தில்குமார், 45, ஷர்மிளா,40, ஆகிய மூன்று பேர் மீதும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நகை, பணம் கொள்ளை
வடவள்ளி: வடவள்ளி அபிராமி நகரை சேர்ந்தவர் வித்யாதர், 27, விவசாயம் மற்றும் பஸ் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த, 27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தாளவாடி சென்றார்.
வீடு திரும்பிய வித்யாதர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த வைரம் மற்றும் தங்கம் நகைகள், 20 பவுன் மற்றும் ரூ.5.50 லட்சம் கொள்ளை போயிருந்தது.
வடவள்ளி போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் சி.சி.டி.வி., காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர்., டிஸ்க்கையும் எடுத்து சென்றது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி
கோவை: ராமநாதபுரம் பாரதிநகர், 6வது வீதியை சேர்ந்தவர் கண்ணன், 33; எம்.சி.ஏ., பட்டதாரி. இவருக்கு டெலிகிராம் குரூப்பில் வந்த ஒரு மெசேஜில், பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மெசேஜில் இருந்த லிங்க்கை கிளிக் செய்து, கண்ணன் தனது விவரங்களை பதிவு செய்தார். அவரை தொடர்பு கொண்ட ஒருவர், ஆன்லைனில் வரும் விளம்பரங்களை பார்த்து ரேட்டிங் கொடுத்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும், அதற்கு சிறிய முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி கண்ணன், பல்வேறு தவணைகளாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.7.50 லட்சத்தை அனுப்பி வைத்தார். அவருக்கு எந்த பணமும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கண்ணன், அவர்களை தொடர்பு கொள்ள முயன்றார்; முடியவில்லை.
இதையடுத்து, கண்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25 பவுன் நகை கொள்ளை
கணபதி: வி.ஜி., ராவ் நகரை சேர்ந்தவர் துர்கா சங்கர், 35; ஐ.டி., ஊழியர். இவர் குடும்பத்தினருடன் அருகே உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். மறுநாள் வீட்டுக்கு சென்றபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. துர்கா சங்கர் புகாரின்படி சரவணம்பட்டி, போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
போலீசாரை மிரட்டிய மூவர்
கோவை: காட்டூர் எஸ்.ஐ., முத்துக்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை காந்திபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வி.கே.கே., மேனன் ரோட்டில் காரில் குடிபோதையில் வந்த வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். ஆத்திரம் அடைந்த காரில் வந்தவர்கள், தகாத வார்த்தைகள் திட்டி முத்துக்குமார் மற்றும் போலீஸ்காரர்களிடம் தகராறு செய்தனர். எஸ்.ஐ., முத்துக்குமாரின் மொபைல் போனை உடைத்து தப்பினர். எஸ்.ஐ., முத்துக்குமார் காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
-தம்பதி மீது மோசடி வழக்கு
கோவை: ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோவை பெள்ளத்தியைச் சேர்ந்த பிரகாஷ், 35, என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை உள்ள கணக்கு வழக்குகளை, ஓட்டல் நிர்வாகத்தினர் சரிபார்த்தனர். அதில் ரூ.11 லட்சத்தை பிரகாஷ் தனது மனைவி மோகனப்பிரியா, 30, வங்கி கணக்கிற்கு மாற்றியது தெரிந்தது. ஓட்டல் மேலாளர் சுமன், ஜெட்வாரி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மோகனப்பிரியா மீது, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
கோவை: செல்வபுரம் எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் தில்லைநகர் பகுதியில் ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள், கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த ரூபேஸ் பிரான்சிஸ், 32, மற்றும் பஞ்சாப் மாநிலம் லுாதியானாவைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங், 30, என்பதும், இருவரும் கோவையில் வீடு எடுத்து தங்கி கஞ்சா பொட்டலங்களை கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, விற்பனை செய்து வந்ததும் தெரிந்து. இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற பெண் கைது
கோவை: சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், பீளமேடு எஸ்.ஐ., ராஜ்குமார் தலைமையில் போலீசார் சின்னியம்பாளையம் சி.ஏ.பி., வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட லதா மகேஸ்வரி, 46, என்ற பெண்ணை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

