பூட்டை உடைத்து நகை திருட்டு
கோவை இடையர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் கோபாலன், 81. கடந்த, 5ம் தேதி குடும்பத்தினருடன் குருவாயூர் கோவிலுக்கு சென்றார். 7ம் தேதி வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பத்து பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீஸ்காரரை மிரட்டிய நபர்கள் கைது
கோவை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக போத்துராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையில், இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு போத்துராஜ் கூறினார். இருவரும், போத்துராஜை தகாத வார்த்தைகளால் திட்டினர். சட்டையை பிடித்து இழுத்தனர். போத்துராஜ் புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள், கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அகமது சையத், 39, உக்கடத்தை சேர்ந்த அப்பாஸ், 40 ஆகியோர் எனத் தெரிந்தது.
சேவல் சண்டை; 14 பேர் கைது
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, பேரூர் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சண்முகம் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட பேரூரை சேர்ந்த மனோஜ்,34, நாகராஜ்,29, ஜான் பீட்டர்,29, ஏழுமலை,45, சண்முகம்,47, கோபால்,50, ரமேஷ்,24, சங்கர்,44, தினேஷ்குமார்,37, தெலுங்குபாளையத்தை சேர்ந்த சங்கிலிராஜ்,39, ராஜேந்திரன்,23, தண்டபாணி,35, செல்வபுரத்தை சேர்ந்த மணிகண்டன்,47, தமிழ்செல்வன்,29 ஆகிய 14 பேரையும், பேரூர் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, 7 சேவல்கள் மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கத்திகுத்து; ஆசாமிக்கு 7 ஆண்டு சிறை
கோவை, சாரமேட்டில் சர்பத் கடை நடத்தி வருபவர் இஸ்மாயில்,65; கரும்புக்கடை, இரண்டாவது வீதியை சேர்ந்த பதுருதீன்,38, அடிக்கடி கடைக்கு சென்று மதுகுடிக்க பணம் கேட்டு இஸ்மாயிலிடம் தொந்தரவு செய்தார். இதை இஸ்மாயில் மகன்கள் சிக்கந்தர், அபுதாகீர் ஆகியோர் கண்டித்தனர். இதனால் முன்விரோதம் கொண்ட பதுருதீன், 2015, ஏப்., 30 ல், இஸ்மாயில் கடையில் இருந்தபோது, அவரை கத்தியால் குத்தினார். தீவிர சிகிச்சைக்கு பிறகு, இஸ்மாயில் உயிர் பிழைத்தார். போத்தனுார் போலீசார் பதுருதீனை கைது செய்து, கோவை முதன்மை சார்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி நம்பிராஜன், குற்றம் சாட்டப்பட்ட பதுருதீனுக்கு, ஏழாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.
ஏ.டி.எம்.,ல் மோசடி
கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சிராஜூதீன், 62; ஆட்டோ டிரைவர். இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அங்கு வந்த ஒரு நபரிடம் ஏ.டி.எம்., கார்டை கொடுத்து, பணம் எடுத்து கொடுக்குமாறு கேட்டார். உடனே அந்த நபர், அவரிடம் ஏ.டி.எம்., கார்டை பெற்று, ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டார். பின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி, சிராஜூதீனுக்கு தெரியாமல் வேறொரு ஏ.டி.எம்., கார்டை, திருப்பி கொடுத்து சென்றார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 3 முறையாக ரூ.31,500 எடுக்கப்பட்டதாக, மெசேஜ் வந்தது. சிராஜூதீன் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
9.5 லட்சம் ரூபாய் மோசடி
கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள மீனாட்சி நகரை சேர்ந்தவர் மலைகண்ணன், 36. இவர் 2019ல், கோவைபுதூர், தொட்டராயன் கோவில் வீதியை சேர்ந்த ஜெரால்டு ரூபன், 45 என்பவர், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறியதன்பேரில், முதல் தவணையாக இரண்டு லட்சம் ரூபாயை, அவரது வங்கி கணக்கில் செலுத்தினார். தொடர்ந்து இரண்டாவது தவணையாக, எட்டு லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆண்டுகள் கடந்தும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பிக்கேட்டபோது, 50 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார்.
மலைகண்ணன் அளித்த புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெரால்டு ரூபன் மற்றும் உடந்தையாக இருந்த, மனைவி ரூபா ஆகியோரை தேடி வருகின்றனர்.