காவலாளியை தாக்கிய வாலிபர் கைது
கோவை: சலிவன் வீதியில் கோபாலகிருஷ்ண சாமி கோவிலில் தினமும் மதியம், 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான டோக்கன்களை அங்கு காவலாளியாக பணிபுரிந்து வரும் சொக்கம் புதுாரை சேர்ந்த மணிகண்டன், 50 என்பவர் வழங்குவார். நேற்று முன்தினம் மதியம் காமராஜபுரத்தை சேர்ந்த விஜய், 27 என்பவர் அன்னதான டோக்கன் வாங்க, கோவிலுக்கு வந்தார். அப்போது மணிகண்டன், அன்னதான டோக்கன் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த விஜய், மணிகண்டனை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கினார். பலத்த காயமடைந்த மணிகண்டன், கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விஜயை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இரு பைக்குகள் திருட்டு
கோவை: தஞ்சாவூரை சேர்ந்தவர் அருண்பிரசாத், 34. இவர் தனது உறவினரின் இறுதி சடங்குக்காக பைக்கில் கோவை வந்தார். அப்போது உறவினர் ஒருவரை பஸ்சில் ஏற்றி விட சிங்காநல்லுார் சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி, பஸ் ஸ்டாண்டில் துாங்கினார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. அருண்பிரசாத் புகாரின்படி, சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
*கோவை துடியலுாரை சேர்ந்தவர் லாரன்ஸ், 28; தனியார் வங்கி ஊழியர். இவர் பீளமேட்டில் உள்ள தனது நண்பர் வீட்டின் முன், பைக்கை நிறுத்திச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. லாரன்ஸ் புகாரின்படி, பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் பலி
கோவை: சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில், 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை பரிசோதித்த போது, அவர் இறந்திருந்தார். தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து இறந்த முதியவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் மாணவர் பலி
சரவணம்பட்டி: நாமக்கல்லை சேர்ந்தவர் பூவரசன், 21. கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில், சத்தி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். விஸ்வாசபுரம் அருகே அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது.
துாக்கி வீசப்பட்ட பூவரசன் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
கோவை: ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று முன்தினம், நவ இந்தியா ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள், ராமநாதபுரத்தை சேர்ந்த சந்துரு, 23, சிங்காநல்லுாரை சேர்ந்த பாலாஜி ராஜ், 24, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
பஸ் டிரைவரிடம் திருட்டு
கோவை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரகதீஷ், 38. கோவையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், கோவை நஞ்சப்பா ரோட்டில் தான் ஓட்டி வந்த பஸ்ஸை நிறுத்தி, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது, அவரது மணி பர்ஸ் காணாமல் போயிருந்தது. அதில் பிரகதீஷ், 3 பவுன் தங்கச் செயின், ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வைத்திருந்தார்.
புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 'சிசி.டிவி.,' காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில் நகை மற்றும் பணத்தை திருடியது திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையைச் சேர்ந்த கோபி, 43, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கடையை உடைத்து திருட்டு
கோவை: பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ், 38. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அதை நோட்டமிட்ட மர்ம நபர், நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் மொபைல் போனை திருடிச்சென்றார். சவுந்தர்ராஜ் புகாரின்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.