மாணவிக்கு பாலியல் தொல்லை
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர், 19 வயது கல்லூரி மாணவி. வேளாண் பல்கலையில் படித்து வருகிறார். மாணவி சொந்த ஊருக்கு சென்று விட்டு கோவை திரும்பினார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கல்லூரி விடுதிக்கு செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மாணவி கூச்சலிட்டதால், அருகிலிருந்தவர்கள் வாலிபரை பிடித்து, காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தை சேர்ந்த டெய்லர் ரூபன், 24 எனத் தெரிந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
வாலிபரிடம் செயின் பறிப்பு
கோவை, குனியமுத்தூர் சின்னசாமி பன்னாடி தெருவை சேர்ந்தவர் ரகுவரன், 38. நேற்று முன்தினம் தனது பைக்கில் கோபாலன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் ரோடு ஓம் சாந்தி நகர் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் பைக்கில் வந்த இருவர், ரகுவரன் பைக் மீது மோதினர். இதில் கோபாலன் கீழே விழுந்தார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், இருவரும் போனில் தகவல் தெரிவித்து மேலும் இருவரை அங்கு வரவழைத்தனர். பின்னர் நான்கு பேரும் ரகுவரனை தாக்கினர். அவருக்கு காயம் ஏற்பட்டது. நான்கு பேரும் ரகுவரனை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். ரகுவரன் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரை தேடி வருகின்றனர்.
வீட்டில் திருட்டு; ஒருவர் கைது
கோவைப்புதூர் ஆல்பா நகரை சேர்ந்த சேகர் மனைவி திலகம், 67; ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவர் கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, கணவருடன் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த இரு மர்மநபர்கள் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆறு வெள்ளி டம்ளர்களை திருடி தப்ப முயன்றனர். சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் வெள்ளிப்பொருட்களுடன் தப்பினார். பிடிபட்டவரை குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருப்பூர் திரு.வி.க., நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 38 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
சூதாட்டம்; வடமாநிலத்தவர் கைது
தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., பார்த்தீபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உலியம்பாளையத்தில் உள்ள பாக்கு செட் அருகில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் சலீம்,24, ஹைசுல்ஹக்,43, பரூக் இஸ்லாம்,26, அப்துல் மாலிக்,31, சதாம் உசேன்,25, அஜ்பூர் ரஹ்மான்,23, சிக்குவலி,38, அன்சார் இஸ்லாம்,20 ஆகிய, 8 பேரையும், தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, மொத்தம், 21,900 ரூபாயையும், சீட்டு கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.