கத்தியால் குத்திய வாலிபர் கைது
கோவை குனியமுத்துார் பாரதி நகரை சேர்ந்தவர் கதிரேசன், 42; உக்கடத்தில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த ரியாஸ் கான், 24, பணிபுரிந்து வந்தார். அவர் தனது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கேட்டுள்ளார். கதிரேசன், ஒரு மாதம் கழித்து உயர்த்துவதாக கூறியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரியாஸ்கான், கதிரேசனை கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கதிரேசன் புகாரின் படி, செல்வபுரம் போலீசார் ரியாஸ்கானை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பெண் உட்பட மூவர் மீது வழக்கு
கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 20; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த நந்தினி, 20, என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர். சில நாட்களுக்கு முன் விக்னேஷ், ராமநாதபுரம் சாவித்திரி நகரில் நந்தினியை சந்தித்துள்ளார். அவரிடம் விக்னேஷ் பேச முயன்றார். இதுகுறித்து நந்தினி தனது காதலன் மகேந்திர பிரசாத், 25, என்பவரிடம் கூறினார். அங்கு வந்த மகேந்திர பிரசாத் மற்றும் அவரது நண்பர் நிதிஷ், 25 ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். விக்னேஷ் புகாரின் படி, ராமநாதபுரம் போலீசார் நந்தினி, அவரது காதலர் மகேந்திர பிரசாத், மற்றும் நிதிஷ் ஆகிய மூவர் மீதும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டிராவல்ஸ் உரிமையாளர் கைது
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் அருணா; தனியார் கல்லுாரி பேராசிரியர். இவர் வெளி நாட்டில் உயர்கல்வி படிக்க முயற்சி செய்து வந்தார். அவருக்கு ஆர்.எஸ்.புரத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் டி.வி.எஸ். நகரை சேர்ந்த ராஜ்குமார், 39 மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி, 38 ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் அருணாவிடம், தாங்கள் சிங்கப்பூரில் உள்ள கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.7.33 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
அருணா அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தார். அவர்கள் எந்த கல்லுாரியிலும் சீட் வாங்கி தரவில்லை. அருணா, பணத்தை திருப்பி கேட்டார். அப்போது ரூ.3.50 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர். மீதி பணம் ரூ.3.83 லட்சத்தை பல மாதங்களாகியும் தரவில்லை. அருணா ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.
மத ரீதியான பதிவு : ஒருவர் மீது வழக்கு
குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டன். இவர் அனைத்து மதம் சார்ந்த அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளின் சமூக வலைதள பதிவுகளை ஆய்வு செய்தார். இதில் விஜய் ரங்கராஜன் என்பவர், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பதிவு போட்டிருப்பது தெரிந்தது. இவரது புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜய் ரங்கராஜனை தேடுகின்றனர்.
சகோதரியை தாக்கிய தொழிலாளி
கோவைப்புதூர் தொட்டராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு, 36; கட்டடத் தொழிலாளி. அடிக்கடி குடிபோதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்ற பிரபு, சகோதரி, தாயிடம் மது குடிக்க பணம் கேட்டார். பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த பிரபு சகோதரியை தாக்கினார். குனியமுத்தூர் போலீசாரிடம், பிரபுவின் சகோதரி அளித்த புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வழக்குப்பதிந்து பிரபுவை சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கோவை சரவணம்பட்டி போலீசார், நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது சரவணம்பட்டி சத்தி ரோட்டில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை பிடித்த போலீசார் சோதனை செய்தபோது, அவர் சரவணம்பட்டியை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி அஸ்வின், 35 என்பதும், கஞ்சா விற்றதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 115 கிராம் கஞ்சா, கூல் லிப், சுவாகத் பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டில் புகுந்து ரூ.5,000 திருட்டு
கோவை கணபதியை சேர்ந்தவர் மாதையன், 37; கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அலமாரியில், இருந்த 5,000 ரூபாய் மாயமாகியிருந்தது. இதுகுறித்து, மாதையன் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

