தனியார் ஊழியர் மீது தாக்குதல்
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 39; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் தடாகம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே நின்றிந்தார். அங்கு வந்த இருவர், ஆனந்தகுமாரிடம் மதுகுடிக்க பணம் கேட்டனர். ஆனந்தகுமார் கொடுக்க மறுத்து, தனது பைக்கில் புறப்பட்டார். ஆத்திரமடைந்த இருவரும், அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். ஆனந்தகுமார் புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தகுமாரை தாக்கிய மணிகண்டன், வேணுகோபால் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.
வாடகைக்கு கொடுத்த கார் மாயம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சசிகுமார், 42; டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கோவையை சேர்ந்த ராஜா என்பவர், மாத வாடகைக்கு கார் ஒன்றை, 2022ம் ஆண்டு செப்., மாதம் பெற்றார். ஒப்பந்தம் முடிந்த பின், காரை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்ட போது, முறையான பதில் இல்லை. இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவிடம் விசாரிக்கின்றனர்.
ரூ.10 லட்சம் பணம் மாயம்
கோவை சரவணம்பட்டி எப்.சி.ஐ., குடோன் ரோட்டில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனியார் வங்கி ஏ.டி.எம்.,-களுக்கு ஊழியர்கள் மூலம், பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் ஒரு அறையில், ஏ.டி.எம்., மையங்களில் நிரப்ப, பெட்டிகளில் லட்சக்கணக்கில் பணம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே, அறையில் இருந்த ஒரு பெட்டி மாயமாகியிருந்தது. அந்த பெட்டியில் ரூ.10 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. பணப்பெட்டி மாயமானது குறித்து நிறுவன பாதுகாவலர், மேலாளர் அன்பரசுவை தொடர்பு கொண்டு தெரிவித்தார். மேலாளர் அன்பரசு அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.