தம்பி மீது தீ வைத்த அண்ணன் கைது
கோவை, புலியகுளம், சின்ன மருதாசல தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்,62. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர் பாண்டியராஜூக்கும்,70 இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, பாண்டியராஜ் ஆத்திரமடைந்து, செல்வராஜ் மீது, கெரசினை ஊற்றி தீ வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனையில், செல்வராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செருப்பு கடையில் திருட முயற்சி
பா.நா.பாளையம், நேதாஜி ரோட்டில் லதா என்பவர், 'புட்வேர்' கடை நடத்தி வருகிறார். இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மர்ம ஆசாமிகள், ஷட்டர் கதவு உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டு, பக்கத்தில் வசித்தவர்கள் சென்ற போது, மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெட்டிக்கடையில் நகை திருட்டு
ஆவாரம்பாளையம், கே.ஆர்.புரத்தில், கிேஷார் பாலாஜி என்பவரது மனைவி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறு நாள் கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கடைக்குள் இருந்த, 10 கிராம் தங்க நகை, 9,500 ரூபாய் ரொக்கம் திருட்டு போயிருந்தது. புகாரின் பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
சினிமா பார்க்க சென்றவர் பைக் மாயம்
கேரள மாநிலம், கோட்டயம், வைக்கத்தை சேர்ந்த மெல்வின் மேத்யூ. ஈச்சனாரியில் தங்கியிருக்கும் அவர், பீளமேட்டிலுள்ள பன்மாலுக்கு சினிமா பார்க்க வந்தார். தனது யமஹா பைக்கை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு, படம் பார்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, பைக் காணாமல் போயிருந்தது. புகாரின் பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி
விளாங்குறிச்சி, டவர் லைன் ரோட்டில், தனியார் பள்ளி அருகே ரோட்டோரத்தில் நின்ற சந்தன மரத்தை, மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்த முயற்சி செய்தனர். இது தொடர்பாக, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சூதாடிய 9 பேர் கைது
ஆர்.எஸ்.புரம், போலீசார் ரோந்து சென்ற போது, டி.பி. ரோடு, டாஸ்மாக் மதுக்கடை அருகிலுள்ள பொது இடத்தில், ஒரு கும்பல் சூதாடியது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற ஒன்பது பேரை, மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 19,700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.