கடையில் பணம் திருட்டு
கோவை அவிநாசி ரோடு கருப்புக்கால் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன், 31; ரேஸ்கோர்ஸ் பழைய போஸ்ட் அலுவலகம் ரோட்டில், பம்ப் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், அர்ஜூன் கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லா பெட்டியில் இருந்த ரூ.1500 திருட்டு போயிருந்தது. அர்ஜூன் புகாரின் படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
--கஞ்சா விற்ற இருவர் கைது
கோவை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் ராமநாதபுரம் சாவித்ரி நகர் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த, 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் கஞ்சா இருந்தது. போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காமராஜர் ரோட்டை சேர்ந்த சதீஷ்குமார், 32, சிங்காநல்லுார் அம்மன்கோவில் வீதியை சேர்ந்த நந்தகுமார், 24, ஆகிய அந்த இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 53 கிராம் கஞ்சா மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.
3 பவுன் நகை திருட்டு
கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் கமலம், 80; இவர் நேற்று முன்தினம் பேரூர் சென்றார். பின் பஸ்சில் இடையர்பாளையம் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பினார். பிரகாசம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, இதையறிந்த கமலம், பெரியகடைவீதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு
கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் தங்கமணி, 70; அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த, 2 பேர் சிகரெட் கேட்டனர். அவர் சிகரெட் எடுக்க முயன்ற போது பைக்கில் வந்த, 2 பேரும் சேர்ந்து தங்கமணி கழுத்தில் கிடந்த, 2 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றனர். தங்கமணி புகாரின்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பணம் பறித்த வாலிபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்தவர் வினித்குமார், 25; இவர் பீளமேட்டில் தங்கி சித்ரா பூங்கா நகரில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வினித்குமார் கடையில் இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்தார். அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.300 பறித்து தப்பி சென்றார். வினித்குமார் புகாரின்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பணம் பறித்தது புதுக்கோட்டையை சேர்ந்த டிரைவர் அரவிந்த்ராஜ், 20, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

