உண்டியலை திருடிய பெயின்டர்
சிங்காநல்லுார், மேற்கு ஆர்.வி.எல்., காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன், 40. இவரது வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் வேலையை செல்வபுரத்தை சேர்ந்த ராகேஷ், 26 என்பவர் செய்து வந்தார். வேலை முடிந்து, ராகேஷ் சம்பளம் பெற்றுக்கொண்டார். கடந்த 19ம் தேதி ஸ்ரீநிவாசன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, கதவு திறந்திருந்தது. பீரோவில் இருந்த உண்டியலை காணவில்லை. அவர் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ராகேஷ் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
உணவு டெலிவரி ஊழியர் பலி
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 41; உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை உணவு டெலிவரி செய்வதற்காக, திருச்சி சாலையில் சிங்காநல்லுாரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி பாலமுருகன் மீது மோதியதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம்பட்டது. அருகில் இருந்தவர்கள் பாலமுருகனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போதைப்பொருள் விற்ற மூவர் கைது
சரவணம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரவணம்பட்டி - துடியலுார் ரோட்டில் உள்ள ஒரு ஆண்கள் விடுதி அருகில், இருந்த காலி இடத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அவர்களை, போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. போதை பொருட்கள் வைத்திருந்த துாத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன், 20, கடலுாரை சேர்ந்த விமல்ராஜ், 21, கணபதியை சேர்ந்த சூர்யா, 23 ஆகியோரை போலீசார் கைது செய்து, 205 கிராம் கஞ்சா, 9 கிராம் மெத்தபெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.