கஞ்சா விற்றவர்கள் கைது
உக்கடம் பகுதியில் கஞ்சா பயன்பாடு, விற்பனை அதிகரித்துள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெரிய கடைவீதி போலீசார் உக்கடம், புல்லுக்காடு, மீன் மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மூவர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள், தெற்கு உக்கடம், அல் அமீன் காலனியை சேர்ந்த ஷான்சா, 27, கணபதியை சேர்ந்த ஹேமசந்திரன், 24 மற்றும் ஹைவேஸ் காலனியை சேர்ந்த ஜான் ஜோசப், 34 ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் 150 கிராம் கஞ்சா இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குட்கா விற்ற மூவர் கைது
மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், போலீசார் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெட்டி கடையில் குட்கா விற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த குருசங்கர், 49, புலியகுளம், ரெட்பீல்டு பகுதியில் குட்கா விற்ற புலியகுளத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, 64 மற்றும் சிங்காநல்லுார், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் குட்கா விற்ற அதே பகுதியை சேர்ந்த சுசீலா, 60 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இருவர் மீது வழக்கு
குறிச்சி பிரிவு பகுதியை சேர்ந்தவர் முகமது ரஷித், 22; இவர் சுந்தராபுரம் மாரியப்ப கோனர் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வீட்டில் இருந்த தினேஷ்குமார், 40 என்பவர் சத்தமாக பாடல் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சத்தத்தை குறைக்கும்படி ரஷித் கேட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவர் ஒருவரை, மாறி மாறி தாக்கிக்கொண்டார். இருவரும் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.