மயங்கி விழுந்து பலி
வீரகேரளத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 44; மாநகராட்சி 39வது வார்டில் உள்ள தண்ணீர் டேங்க் 'ஆப்ரேட்டராக' வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பரமேஸ்வரன் தனது பைக்கில் வடவள்ளி அருகே சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவர் கைது
ஆர்.எஸ் புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டி.கே., வீதியில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, சின்னையா, 61 என்பவரை கைது செயதனர்.
கஞ்சா வாலிபருக்கு சிறை
பி.என்.புதுார், மடத்துார் மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியை கண்காணித்து வந்தனர். அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனையிட்ட போது, ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்த வாலிபரை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில் அவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த நிநிஷ், 23 என்பதும், வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.