அரசு பஸ் மோதி முதியவர் பலி
நேற்று முன்தினம் மாலை உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்கு 69ஏ பஸ் வந்தது. பஸ் சிங்காநல்லுார் பஸ்கள் நிற்கும் ரேக் அருகில் வந்த போது, சாலை கடக்க நடந்து சென்று கொண்டிருந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது.
இதில், முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெண் துாக்கிட்டு தற்கொலை
உப்பிலிபாளையம், இந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் மனைவி வினோதினி, 33. இவர் கடந்த சில நாட்களாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
தனக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவதிப்பட்டு வந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த 8ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.