/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு; அலைக்கழிக்கப்படுவதால் ஆசிரியர்கள் சோர்வு
/
கோவை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு; அலைக்கழிக்கப்படுவதால் ஆசிரியர்கள் சோர்வு
கோவை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு; அலைக்கழிக்கப்படுவதால் ஆசிரியர்கள் சோர்வு
கோவை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு; அலைக்கழிக்கப்படுவதால் ஆசிரியர்கள் சோர்வு
ADDED : மார் 31, 2025 10:23 PM

கோவை; பத்தாம் வகுப்பு பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர், ஆசிரியைகள், 25 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் பணியமர்த்தப்பட்டு, அலைக்கழிக்கப்படுவதாக அதிருப்தி எழுந்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்வு கடந்த, 28ம் தேதி துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில், 518 பள்ளிகளை சேர்ந்த, 40 ஆயிரத்து, 61 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்கென, 158 மையங்கள் அமைக்கப்பட்டு, 158 முதன்மை கண்காணிப்பாளர்கள், 158 துறை அலுவலர்கள், 46 வழித்தட அலுவலர்கள், 220 பறக்கும் படை,நிலையான படையினர், 2,370 அறை கண்காணிப்பாளர்கள், 945 'ஸ்கிரைப்'கள் உட்பட, 4,217 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு பணிக்கு தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள, 4,217 பேரில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள்.இப்பணிக்கு, வடவள்ளியில் இருந்து பீடம்பள்ளியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு, 27 கி.மீ., பயணித்து,ஆசிரியை ஒருவர் சென்று வருகிறார்.
அதேபோல், சிங்காநல்லுாரை சேர்ந்த ஆசிரியை ஒருவர், வடவள்ளிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளதால் தினமும் வாகனங்களில் அடித்து, பிடித்து செல்ல வேண்டியுள்ளது. முன்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில், 15 கி.மீ., துாரத்துக்குள் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.
கோவையில் மட்டும்தான், தொலைதுாரத்துக்கு பணியமர்த்தப்படும் அவலம் உள்ளது. காலை, 10:00 மணி தேர்வுக்கு, வாகனங்களில் உயிரை கையில் பிடித்து செல்கிறோம். நாளை (2ம் தேதி) ஆங்கிலத் தேர்வு நடக்கிறது.
அதற்குள் அலைச்சலை தவிர்க்கும் விதமாக, அருகே இருக்கும் மையங்களுக்கு ஆசிரியர்களை பணியமர்த்தினால் சிரமமின்றி இருக்கும். மாவட்ட கல்வி அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்பாலமுரளியை தொடர்பு கொண்டபோது அவர் மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை.