/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழிப் பூங்கா சிறப்புகள்
/
செம்மொழிப் பூங்கா சிறப்புகள்
ADDED : நவ 25, 2025 06:59 AM

கோவை: முதல்வராக இருந்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று தமிழ் மொழிக்கு செம்மொழி எனும் பெருமை வழங்கி 2005 நவம்பரில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
அதை கொண்டாடும் வகையில் 2010 ஜூன் மாதம் உலக தமிழ் அறிஞர்களை வரவழைத்து கோவையில் விழா நடத்திய கருணாநிதி, கோவை மாநகரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆட்சி மாறியதால், அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. பத்தாண்டுக்கு பின் திமுக ஆட்சிக்கு வந்ததும், 2021 நவம்பரில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், காந்திபுரத்தில் உலக தரத்தில் செம்மொழிப் பூங்கா இரு கட்டங்களாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
கடந்த 2023 டிசம்பரில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பில் அமைக்க முடிவாகி, முதல் கட்டமாக 45 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா அமைக்க ரூ.208.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதை தொடர்ந்து, அங்கு தாவரவியல் பூங்கா அமைப்பது, சூரியதகடுகள் பொருத்துவது. சிற்பங்கள் நிர்மாணிப்பது, பேட்டரி வாகனங்கள் இயக்கம், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து நீர் எடுத்து வருதல் போன்ற பணிகள் வேகமாக நடந்தன.
இறுதிக்கட்டத்தில் தினமும் 3,000 தொழிலாளர்கள் மூன்று ஷிப்ட்களில் வேலை செய்தனர். நேற்று இரவு வரை நடந்த பணிகள் முடிந்து, செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இப்பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம். நீர்த் தோட்டம். மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம். ரோஜா தோட்டம். பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் ஆகியவை உள்ளன.
செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகளுடன், 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் நடப்பட்டுள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மைய கட்டடம். 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், பணியாளர் அறை. உணவகம். ஒப்பனை அறை. சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி ஆகியவையும் அமைந்துள்ளன.
தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் 453 கார். 10 பஸ், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருள்களை விற்க மதி அங்காடி நிறுவப்பட்டுள்ளது.
உலகத் தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். 4,000 சதுர அடி பரப்பளவில் டெராரியம் என்ற உள்வன மாதிரி காட்சியமைப்பு , குழந்தைகளுக்கு 14,000 சதுர அடி விளையாட்டு திடல். உள்விளையாட்டு அறை. மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு திடல் போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு.
பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகம், சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள் அமைத்து, அதில் QR மற்றும் Barcode குறியீடுகளும் தரப்பட்டுள்ளன.
”செம்மொழிப் பூங்கா கோவை சுற்றுச்சூழலைப் பராமரிக்கிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது. ஆய்வுகளுக்கும் உதவுகிறது” என அதிகாரிகள் கூறினர்.

