/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்கா அனைவரையும் கவரும்; டிச., இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டம்
/
செம்மொழி பூங்கா அனைவரையும் கவரும்; டிச., இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டம்
செம்மொழி பூங்கா அனைவரையும் கவரும்; டிச., இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டம்
செம்மொழி பூங்கா அனைவரையும் கவரும்; டிச., இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டம்
ADDED : நவ 13, 2025 12:45 AM

கோவை: காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இவ்வளாகத்தின் ஒரு பகுதியில், 1,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதியுடன் மாநாட்டு மையம் கட்டப்பட்டிருக்கிறது.
பூங்காவுக்குள் நுழைந்தவுடன், பிரமாண்டமாக மலை முகடு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மலைக்குன்றுகளுக்கு இடையே மரங்கள் காணப்படுகின்றன. மலை முகடுகளில் விலங்கினங்கள் இருப்பது போல் செதுக்கப்பட்டு இருப்பது ஈர்க்கிறது.
மலை முகடுகளில் நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் வழிந்தோடி வருவது போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அருகாமையில் கடையேழு வள்ளல்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
23 வகையான பூந்தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ராஜமுந்திரியில் இருந்து மரக்கன்றுகள் தருவிக்கப்பட்டு, நடப்பட்டு வருகின்றன.
100 வகையான ரோஜாக்களுக்கு வரிசையாக மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன. பூங்கா வளாகத்தின் மற்றொரு பகுதியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, நீரூற்று ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.
சிறுவர்கள் விளையாடுவதற்கு தனியிடம், குடும்பத்துடன் வருவோர் ஓரிடத்தில் ஜாலியாக அமர்ந்து பேசுவதற்கு வசதியாக, புல்தரை அமைக்கப்பட்டிருக்கிறது.ஆங்காங்கே இருக்கை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சிறுவர், சிறுமியர் 'மேஸ்' விளையாட்டு விளையாடும் வகையில் மரங்களுடன் உருவாக்கியுள்ள பூங்கா, மனதை கொள்ளை கொள்கிறது.
இப்பூங்காவை இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க தமிழக அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் அலுவலகத்தில் இருந்து உயரதிகாரிகள் கோவை வந்து, பூங்கா வளாகத்தை சுற்றிப் பார்த்தனர்.
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நுழைவாயில் பகுதியை அலங்கரிக்க வேண்டியுள்ளது என்பதால், டிச., இறுதிக்குள் பணியை முழுமையாக முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ரூ.47.11 கோடி தேவை செம்மொழி பூங்கா ரூ.167.25 கோடியில் உருவாக்கப்படுகிறது. 50 சதவீத பங்களிப்பு தொகையாக, ரூ.83.50 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும். இன்னும் ரூ.27.50 கோடி தர வேண்டும். மக்களை ஈர்க்கும் வகையில் பூங்கா வளாகத்தை இன்னும் அழகுபடுத்த, கூடுதல் மதிப்பீட்டு தொகை ரூ.47.11 கோடி கோரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு சென்றுள்ளார்.

