ADDED : செப் 22, 2024 05:40 AM

கோவை : கோவையில், செம்மொழி பூங்கா வளாகத்தில் பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், நடைபயிற்சி பாதை உள்ளிட்ட பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. இதுவரை, 35 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன.
கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான, 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.172 கோடியில் செம்மொழிப்பூங்கா - பேஸ் 1 பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. 2023 டிச., 18ல் அடிக்கல் நட்டு துவக்கி வைக்கப்பட்டது.
நுழைவாயிலுக்கு அருகே உதயசூரியன் சின்னத்தை நினைவூட்டும் வகையில் இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே செம்மொழி பூங்கா பெயர் பலகை தெரியும் வகையிலான கட்டமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதில், பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுமான பணி, 50 சதவீதம் நிறைவடைந்து விட்டது. திறந்தவெளி அரங்கம், பூங்கா பராமரிப்பாளர்கள் அறை, ஓட்டல், நுழைவாயில், டிக்கெட் கவுன்டர் மற்றும் சுகாதார வளாகம், சுற்றுச்சுவர் கட்டும் பணி, நடைபயிற்சி பாதை, தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுவரை ஒட்டுமொத்தமாக, 35 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன.
மத்திய சிறை வளாகத்தில் உள்ள பழமையான வீடுகளை இடிக்காமல், வேறு உபயோகத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அதேபோல், பூங்கா வளாகத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன. அவற்றை வெட்டக்கூடாது எனவும் ஒப்பந்த நிறுவனத்தினருக்கு கறாராக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒப்பந்த காலமாக, 2025 மே மாதத்துக்குள் பணியை முழுமையாக முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.