/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாரம் ஒரு ஊராட்சியில் துாய்மை பணி
/
வாரம் ஒரு ஊராட்சியில் துாய்மை பணி
ADDED : செப் 03, 2025 11:01 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், வாரந்தோறும் ஒரு ஊராட்சியை தேர்வு செய்து, முழுவீச்சில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், 'துாய்மை தெரு வீரர்கள்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதற்காக வாரந்தோறும், ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, வீடுகள்தோறும் குப்பையை தரம் பிரித்து அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பை முழுவீச்சில் அகற்றம் செய்யப்படுகிறது.
அதில் மக்கும் குப்பை, ஆச்சிப்பட்டி உரக்கூடத்திற்கும், பிளாஸ்டிக், பாட்டில் உள்ளிட்ட மக்காத குப்பை வெள்ளாளபாளையம் பிளாஸ்டிக் அரவை யூனிட்டிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், கிராமங்கள்தோறும், திறந்தவெளியில் குப்பை கொட்டுவது பெருமளவு தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகளில், 196 துாய்மைக் காவலர்கள் பணியில் உள்ள நிலையில், அவர்களுக்கு 2 செட் சீருடை, கிளவுஸ் என, பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிராமங்கள் தோறும் வீடு வீடாக செல்லும் அவர்கள், குடியிருப்புவாசிகள் திறந்தவெளியில் குப்பைக் கொட்டுவதை தவிர்த்து, அவைகளை தரம் பிரித்து அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
தொடர்ந்து, குப்பை கொட்டும் இடங்கள் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்தப்படுகிறது. இதற்காக வாரந்தோறும் ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.