ADDED : பிப் 16, 2026 05:55 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் நீர் நிலைகள் உள்ளன. இதில், ஒரு சில ஊராட்சிகளில் நீர்நிலை பகுதிகளை கவனிக்காமல் இருப்பதால், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து நீர் நிலைகள் அடையாளம் தெரியாத அளவில், புதராக காட்சியளிக்கிறது.
ஆனால், ஒரு சில ஊராட்சிகளில் அவ்வப்போது தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பருவமழை காலத்தில் இங்கு தண்ணீர் தேக்கமடைவதால், நிலத்தடி நீர் பாதுகாகப்படுவதோடு, விளை நிலங்களும் செழிப்படைகிறது.
தற்போது, வடசித்தூர் செல்லும் வழியில் பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள நீர்நிலையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக, நீர் வரத்து வாய்க்கால் அகலப்படுத்தும் பணிகள், 9 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'கோடை காலம் துவங்கும் தருவாயில், நீர் நிலைகளில் தூய்மை பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த பணிகள் நிறைவடையும்,' என்றனர்.
