/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலபைரவர் கோவிலை பூட்டியது தவறு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு
/
காலபைரவர் கோவிலை பூட்டியது தவறு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு
காலபைரவர் கோவிலை பூட்டியது தவறு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு
காலபைரவர் கோவிலை பூட்டியது தவறு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு
ADDED : மார் 27, 2025 11:52 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் காலபைரவர் கோவில் பிரச்னையை அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, 24 ஏக்கர் நிலம் உள்ளது. கோவிலை பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பூஜை செய்து வந்தனர்.
பூஜை செய்பவர்கள் குடும்பத்தினருக்கும், ஊர் பொதுமக்களும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்னையில், இரு தரப்பினரும் கோவிலை பூட்டினர்.
இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு வருவாய் துறை மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, அமைதி குழு கூட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதில், நேற்று முன்தினம் தாலுகா அலுவலக வளாகத்தில், அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராணி, கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், இரு தரப்பினர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அறநிலையத்துறை உதவி ஆணையர் பேசுகையில், ''காலபைரவர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, கோவில் மற்றும் கோவில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இருதரப்பினரும் சாவியை ஒப்படைக்க வேண்டும். மேலும், அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு புதிதாக பூஜை செய்ய ஆள் நியமிக்கப்படுவார்,'' என்றார். இதையடுத்து, இரு தரப்பினரும் சாவியை ஒப்படைத்தனர்.
நேற்று மாலையில் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது. கோவிலில் பூஜை செய்தவர்களின் பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கொண்டு இரு தரப்பினருக்கும் இடையே எந்த வித பிரச்னையும் ஏற்படக்கூடாது, என, மூன்று துறை அதிகரிகளும் எச்சரித்துள்ளனர்.