முதல்வர் மேடை போச்சே :புலம்பும் காங். நிர்வாகிகள்
முதல்வர் மேடை போச்சே :புலம்பும் காங். நிர்வாகிகள்
ADDED : ஏப் 01, 2026 10:00 PM
கோவை: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. டில்லியில் ராகுல் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, தமிழக வேட்பாளர் பரிந்துரை பட்டியலை கிழித்து வீசியதாகவும் செய்தி வெளியானது.
நேற்று மாலை கூடுவதாக இருந்த மத்திய தேர்வுக் குழு கூட்டமும் நடைபெறவில்லை. இதனால், வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இது, வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் காங். பிரமுகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நிர்வாகிகள் நமது நிருபரிடம் கூறியதாவது:
சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் 5 பேர் வேட்பாளருக்கான இறுதிச் சுற்றில் உள்ளோம். அனைவருமே மனு தாக்கல் செய்வதற்கான அனைத்துப் பணிகளையும் முடித்து, தயாராக காத்திருக்கிறோம்.
ஆனால், இன்று டில்லியில் இருந்து எம்.பி., ஜோதிமணியும் தமிழகம் திரும்பிவிட்டார். கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 8 எம்.பி.கள் ராகுலை சந்திக்க முயன்றபோது, அவர் காரில் ஏறி சென்றுவிட்டார். இதனால், கட்சியின் மத்திய தேர்வுக் குழு கூட்டமும் நடக்கவில்லை.
நாளை (பிப்.2) கொடிசியா வளாகத்தில், முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். காங். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தால், முதல்வருடன் மேடையில் ஏறி இருப்போம். முதல்வர் நமது பெயரைச் சொல்லி ஆதரவு திரட்டியிருப்பார். அந்த வாய்ப்பு வீணாகி விட்டது. பெரும் ஏமாற்றமாக உள்ளது.
