/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையும் வாழையும் யானையால் துவம்சம்
/
தென்னையும் வாழையும் யானையால் துவம்சம்
ADDED : ஜூலை 13, 2025 05:49 AM

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே காட்டு யானையால் தென்னங்கன்றுகள், வாழை, பாக்கு மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
கோவை வடக்கு மலையோர கிராமங்களில், காட்டு விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வரவை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முழுமையாக தடுத்து நிறுத்த இயலவில்லை.
குறிப்பாக, காட்டு யானைகளின் வரவால், மலையோர கிராமங்களில் வேளாண்மை அதிகமாக பாதித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, தாளியூர் பழனிசாமி தோட்டத்தில் புகுந்த யானை, அங்கிருந்த தென்னை மரங்களையும், தென்னங்கன்றுகளையும், பாக்கு மரங்களையும் முட்டி தள்ளி கீழே சாய்த்தது. இதே போல அதே பகுதியில் வாழை மரங்களையும், கீழே தள்ளி சேதப்படுத்தியது.
இது குறித்து, தடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'காட்டு யானைகளின் வருகைக்கு அஞ்சி, கரும்பு பயிரிட இப்பகுதி விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். தொடர்ந்து தென்னங்கன்றுகளையும், வாழைகளையும், பாக்கு மரங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்துவதால், அவற்றையும் பயிரிட முடியாத சூழல் ஏற்படலாம். இப்பிரச்னைக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.