/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் ஊடுபயிராக செய்யலாம்... அழகு மலர் சாகுபடி! வழிகாட்டுகிறது தோட்டக்கலைத்துறை
/
தென்னையில் ஊடுபயிராக செய்யலாம்... அழகு மலர் சாகுபடி! வழிகாட்டுகிறது தோட்டக்கலைத்துறை
தென்னையில் ஊடுபயிராக செய்யலாம்... அழகு மலர் சாகுபடி! வழிகாட்டுகிறது தோட்டக்கலைத்துறை
தென்னையில் ஊடுபயிராக செய்யலாம்... அழகு மலர் சாகுபடி! வழிகாட்டுகிறது தோட்டக்கலைத்துறை
ADDED : செப் 17, 2025 09:04 PM

பொள்ளாச்சி; 'தென்னையில் ஊடுபயிராக, பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதில், புதியதாக 'அல்பினியா' என்ற அழகு மலர் பணப்பயிராக சாகுபடி செய்து லாபம் பார்க்கலாம்,' என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டுகின்றனர்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், 45,000 ஏக்கர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தென்னையில், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊடுபயிராக வாழை, பாக்கு, ஜாதிக்காய், மிளகு மற்றும் கோகோ பயிரிட்டு விவசாயிகளின் வருவாயை பெருக்க தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை வழிகாட்டுகிறது.அதற்கான பல்வேறு விதமான திட்டங்களின் வாயிலாக நாற்றுகள் மற்றும் உயர் மற்றும் இயற்கை சார்ந்த இடுபொருட்களை வழங்குகிறது.
தென்னையில் ஊடுபயிர்களை பயிரிடுவதன் வாயிலாக விவசாயிகள் வருவாய் மேம்படுத்த முடியும். அதில், அழகு மலர் பணப்பயிரான, 'அல்பினியா' சாகுபடி செய்யலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டுகின்றனர்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
தென்னையில் ஊடுபயிராக புதிய வரவான, 'அல்பினியா' (ஜிஞ்ஜர் லில்லி) என்ற இஞ்சி தாவர குடும்பத்தை சேர்ந்த பணப்பயிர் சாகுபடி செய்யலாம். இதன் அழகிய சிகப்பு வண்ணத்தில் காணப்படும் பூவடிச் சிற்றிலைகள், பூ விற்பனையாளர்களால், விரும்பி வாங்கப்படுகிறது.
செடிகள் மூன்று அடி முதல், 15 அடி வரை வளரக்கூடியது. நடவு செய்த ஐந்து மாதங்களில் பூக்கள் பூக்க துவங்குகின்றன. 'அல்பினியா' தாவரத்தில் பலவித ரகங்கள், இந்திய ஆராய்ச்சி நிலையங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில், 'ஜங்கிள் கிங்' மிகவும் பிரபலமான ரகமாகும். மேலும், 'ஜங்கிள் குயில், மடிகேரி, ரெட் ஜிஞ்சர்' போன்ற ரகங்களும் உள்ளன.
தென்னந்தோப்புகளில் காணப்படும் நிழல் விழும் நிலத்தில் நன்கு வளரக்கூடிய மலர் செடியாகும். இதன் அழகான பூக்கள், நீண்ட சேமிப்பு காலம் காரணமாக விவசாயிகளிடமும், மலர் வியாபாரிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'அல்பினியா'வின் பக்க கன்றுகள் நடவுப்பொருளாக, 5 X 5 அடி என்ற இடைவெளியில், 30 X 30 X 30 செ.மீ. அளவுள்ள குழிகள் தோண்டி நடவு செய்ய வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்து மூடாக்கு இட்டு வளரும் போது, செடிகள் ஆறாவது மாதத்தில், பூக்க ஆரம்பிக்கும். மூன்று அடி நீளம் உள்ள பூக்களை காலை, 9:00 மணிக்கு முன்பும், மாலை, 4:00 மணிக்கு பின்பும் அறுவடை செய்து, 4 X 1.5 X 1.5 அளவுள்ள பெட்டிகளில், 42 கொத்துகள் என்ற அளவில் அடுக்கி வைக்க வேண்டும்.
நடவு செய்த முதல் ஆண்டில் செடி ஒன்றுக்கு 4 - 5 பூங்கொத்துகள் கிடைக்கும். இவை, 5 - 7 நாட்கள் வரை வாடாமல் இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், பூக்கும் பருவமானது ஆக. முதல் பிப். வரையாகும்.
தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு பூங்கொத்து, 60 - 80 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இது 'பொக்கே' போன்றவைக்கு அதிகம் பயன்படுத்துகின்றன.'அல்பினியா' தென்னை விவசாயிகளுக்கு ஒரு அழகு மலராகவும், பணப்பயிராகவும் இருக்கும்.
இது குறித்து மேலும் விபரங்களுக்கு ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.