காசாவை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் ஆகலாம்: ஐ.நா., எச்சரிக்கை
காசாவை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் ஆகலாம்: ஐ.நா., எச்சரிக்கை
ADDED : அக் 07, 2025 10:31 PM

காசா : இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசாவின் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், அதன் விவசாய நிலங்களின் வளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகளும் ஆகலாம் என, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத குழு இடையே போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றது.இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சேத மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:தாக்குதலில் காசாவில் இடிந்து விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றுவது, ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில், 500 டன்களுக்கும் அதிகமான குப்பை குவிந்துள்ளன. காசாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகும். ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும். வளமான மண்ணுக்கும், நீண்ட நேரம் மத்திய தரைக்கடல் சூரிய ஒளிக்கும் பெயர் பெற்ற காசாவில், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, வெள்ளரி உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களும் விளைந்தன.ஆனால், போர் அங்குள்ள 15,000 ஹெக்டேர் வளமான நிலத்தில், 232 ஹெக்டேரை மட்டுமே விட்டு வைத்து உள்ளது. முன்னர் உற்பத்தி செய்த நிலத்தில் 98.5 சதவீதம் தரிசாக மாறிவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.