/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் தென்னை வளர்ச்சி மண்டல அலுவலகம் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது பலன்
/
கோவையில் தென்னை வளர்ச்சி மண்டல அலுவலகம் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது பலன்
கோவையில் தென்னை வளர்ச்சி மண்டல அலுவலகம் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது பலன்
கோவையில் தென்னை வளர்ச்சி மண்டல அலுவலகம் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது பலன்
ADDED : நவ 11, 2024 04:21 AM
தென்னை விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்தின் விளைவாக, தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் 22 லட்சம் எக்டர் பரப்பில், தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 89.55 சதவீத பரப்பு, கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில், இந்த மாநிலங்களில் மட்டும் 91.31 சதவீதம் உற்பத்தியாகிறது. தேசிய அளவில், பொள்ளாச்சி தேங்காய் மற்றும் இளநீருக்கு தனி சிறப்பிடம் உள்ளது. தென்னை வளர்ச்சி வாரிய தலைமை அலுவலகம் கொச்சியில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய மண்டலத்துக்கான அலுவலகம் சென்னையில் அமைந்திருந்தது. தென்னை அதிகம் சாகுபடியாகும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை அமைக்காமல், விவசாயிகளால் எளிதில் அணுக முடியாத தூரத்தில் மண்டல அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு, தென்னை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அல்லது கோவையில் தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக போராடி வந்தனர். இதையடுத்து, கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் அமைக்க ஆய்வு நடந்தது; நிறைவேறவில்லை.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை அருகே தளியில், மத்திய தென்னை நாற்றுப் பண்ணைக்கு 100 ஏக்கர் இடம் கோரப்பட்டது. அதை மாநில அரசு வழங்கிய நிலையில், அங்கு மண்டல அலுவலகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையும் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டது.
இதனிடையே, தற்போது சென்னையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மண்டல அலுவலகம் கோவையில் அமைவது, கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு, இத்திட்டங்களின் பயன்கள் எளிதில் சென்றடையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கைகூடிய கோரிக்கை
தற்போது சென்னையில் உள்ள மண்டல அலுவலகம், கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக முயன்று வந்தோம். தற்போது அது கைகூடியுள்ளது.
- சக்திவேல், செயலாளர்,
தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம்.
3
-- நமது நிருபர் --