/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் தேவை! பெங்களூரு குழுவினரிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
/
தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் தேவை! பெங்களூரு குழுவினரிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் தேவை! பெங்களூரு குழுவினரிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் தேவை! பெங்களூரு குழுவினரிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2025 10:04 PM

பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில், புதிய ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்,' என, பெங்களூரு ஆராய்ச்சி மைய அதிகாரிகளிடம் தென்னை நார் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு கயிறு வாரிய ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சண்முகசுந்தரம், ஆராய்ச்சியாளர்கள் ராஜா, விவேக், சுபிஜெபஸ்டின் ஆகியோர், பொள்ளாச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தென்னை நார் உற்பத்தியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து, மோதிராபுரத்தில் உள்ள மத்திய அரசின் கூட்டுக்குழுமத்திலும் ஆய்வு செய்தனர்.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
சிறு,குறு, நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், கயிறு வாரிய தலைவர் விபுல் கோயல், செயலாளர் அருண் ஆலோசனைப்படி பெங்களூரு ஆராய்ச்சி நிறுவன குழுவினர் ஆய்வு செய்தனர்.
கயிறு வாரிய மண்டல அலுவலகத்தில் தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம், கூட்டுக்குழுத்தினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.கேரளாவில் களவூர், கர்நாடகாவில் பெங்களூருவில் புதிய ஆராய்ச்சி நிலைய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அங்கு உபகரணங்கள், தர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கு முன், உற்பத்தியாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப உபகரணங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, அதிகாரிகள் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டியில் புதிய ஆராய்ச்சி நிலையம், பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்கு குழுவினர், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, மத்திய அரசிடம் நிதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும், என, குழுவினர் தெரிவித்தனர்.
தொழிலில் உள்ள பிரச்னைகள், வருங்காலத்தில் தொழிலுக்கு மேற்கொள்ள வேண்டிய உதவிகள் குறித்து கேட்டறிந்தனர்.
தமிழகத்தில் மொத்தம், 27 மாவட்டங்களில், எட்டாயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. மொத்த ஏற்றுமதியில், 50 சதவீதம் தமிழகத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. மூலப்பொருளை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க ஊக்கப்படுத்த வலியுறுத்தப்பட்டது. புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, தொழில் பயிற்சிகள் அளிக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.