மகசூலை அதிகரிக்க உதவும் ‘தென்னை டானிக்’: வேர் வழியாக செலுத்த செயல்விளக்கம்
மகசூலை அதிகரிக்க உதவும் ‘தென்னை டானிக்’: வேர் வழியாக செலுத்த செயல்விளக்கம்
UPDATED : நவ 27, 2026 07:30 PM
ADDED : நவ 27, 2026 07:30 PM

ஆனைமலை: ஆனைமலை அருகே, ஒடையகுளத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை மாணவர்கள், கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, உதவி இயக்குனர் அலுவலகத்தில் உயர் தொழில்நுட்ப முறைகள் குறித்த பயிற்சியில் பங்கேற்றனர்.
அதில், பாலிஹவுஸ் சாகுபடி, சொட்டுநீர் பாசனம், தானியங்கி நீர்பாசன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டது.
பாலிஹவுசில் வெள்ளரி சாகுபடி, உரப்பாசன முறை, நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்கள் விளக்கம் பெற்றனர். சொட்டு நீர் பாசனத்தின் வாயிலாக, நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பாசன கருவிகளை முறையாக பராமரித்தல், தென்னை பயிரில் நீர் மேலாண்மை குறித்து விளக்கப்பட்டது.
தானியங்கி நீர்பாசன முறையில், மொபைல் செயலி வாயிலாக பாசனத்தை கட்டுப்படுத்துதல், குறிப்பிட்ட நேர இடைவெளியில் தானகாவே நீர்பாசனம் செய்தல், உர பாசன மேலாண்மை, நீரின் கடத்து திறன், அமில காரத்தன்மை ஆகியவற்றை கண்காணித்தல் போன்ற, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
சிறு, குறு விவசாயிகளுக்கான அரசு மானிய திட்டங்கள், தென்னை வளர்ச்சி ஊக்குவிப்பு திட்டங்கள், ஊடுபயிர் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கிணத்துக்கடவு
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை நான்காம் ஆண்டு மாணவர்கள், கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமத்தில், தனியார் தோட்டத்தில் விவசாயிகளுக்கு சென்னை மரங்களுக்கு வேர் வழியாக ஊட்டமளித்தல் குறித்த செயல்விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, தென்னை மரங்களில் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஊட்டச்சத்து கிடைப்பதை அதிகப்படுத்தவும், ‘தென்னை டானிக்’ சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து தெரிவித்தனர்.
தென்னை டானிக் முக்கியத்துவம், செயல்முறை மற்றும் பயன்கள் குறித்தும், தென்னை மரங்களில் வளர்ச்சியை மேம்படுத்தி மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
