/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேன்சர் நோய் போன்று தென்னையில் வேர்வாடல்! வேளாண் பல்கலை துணைவேந்தர் வேதனை
/
கேன்சர் நோய் போன்று தென்னையில் வேர்வாடல்! வேளாண் பல்கலை துணைவேந்தர் வேதனை
கேன்சர் நோய் போன்று தென்னையில் வேர்வாடல்! வேளாண் பல்கலை துணைவேந்தர் வேதனை
கேன்சர் நோய் போன்று தென்னையில் வேர்வாடல்! வேளாண் பல்கலை துணைவேந்தர் வேதனை
ADDED : நவ 26, 2024 10:19 PM

பொள்ளாச்சி; 'மனிதர்களுக்கு கேன்சர் போன்று, தென்னை மரங்களுக்கு கேரள வேர் வாடல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதித்த மரங்களை வெட்டும் போது வேதனையாக உள்ளது,'' என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னையில் வேர் வாடல் நோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயிகளுக்கான இடு பொருட்கள் வழங்கும் விழா, பொள்ளாச்சி அருகே நஞ்சகேவுண்டன்புதுாரில் நடந்தது.
கோவை வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை தலைவர் பேராசிரியர் அங்கப்பன் வரவேற்றார். கோவை வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, தெற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி ஆகியோர் பேசினர்.
சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்து பேசியதாவது:
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னையில் வேர்வாடல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஸ்டெப் நான்கு என்பது மரத்தை வெட்டி எடுக்க வேண்டிய நிலையாகும்.
குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள், முழுமையாக கேரளா வேர் வாடல் நோய் கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழலில், மேலாண்மை செய்து பாதுகாக்க என்ன செய்யலாம் என அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு, பேசினார்.
கோவை வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:
அழகாக இருந்த தென்னந்தோப்புகளுக்கு இன்று சவால், அச்சுறுத்தலாக கேரளா வேர்வாடல் நோய் வந்துள்ளது. சிவப்பு கூண் வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பல்வேறு நோய்கள் வந்ததும், அவற்றை கட்டுப்படுத்த முடிந்தது.
தற்போது வந்துள்ள கேரள வேர் வாடல் நோய் மேலாண்மை செய்ய முடிகிறது. இதன் தாக்கம் கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் தற்போது, அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை பகுதிகளில் கள ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டது.
இதையடுத்து, அரசு திட்டங்களை அறிவித்தது. மனிதர்களுக்கு கேன்சர் போன்று, தென்னையில் கேரள வேர் வாடல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல், இரண்டு கட்டங்களில் இருந்தால் மரங்களை காப்பாற்ற முடியும். மூன்றாவது நிலை இருந்தால், காப்பாற்ற போராடலாம். நான்காவது கட்டத்தில் இருந்தால் மரங்களை வெட்டியே ஆக வேண்டும்.
பல ஆண்டுகள் வளர்ந்த மரங்களை வெட்டுவது வேதனையாக உள்ளது. இதனால், மரங்களில் மேலும் பரவாமல் இருக்க, விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக, இரண்டு ஆண்டுக்கு, 100 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 17,500 ரூபாய் மதிப்புள்ள அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேர் உட்பூசணம், ஆகியவை தலா, 8.75 கிலோ; பேசில்லஸ் சப்டிலிஸ்,17.5 கிலோ; டிரைக்கோ டெர்மா விரிடி, 17.5 கிலோ; கொகோகான், 12.5 லிட்டர்; தென்னை டானிக், 7 லிட்டர்; சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த ஒரு பாக்கெட் ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி, தென்னை வேர்வாடல் நோய் குறித்தும், அதற்காக வழங்கப்படும் இடு பொருட்கள் குறித்து விளக்கம் அளித்து இடுபொருட்கள் வழங்குவது குறித்து விளக்கினார். வேளாண் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டால வீரிய தன்மை கட்டுப்படுத்த முடியும் என விளக்கப்பட்டது.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து, விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டன. கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.