ADDED : ஏப் 09, 2026 07:40 PM
காரமடை: காரமடை அருகே தென்னை மரங்களில், சிவப்பு ஊசி வண்டுகள் தாக்குதல் அதிகரித்துள்ளதால், மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு, மருதூர், தோலம்பாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை பிரதான விவசாயமாக உள்ளது. இப்பகுதிகளில், தென்னையில் சிவப்பு ஊசி வண்டு தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், இந்த வகை வண்டுகள், தென்னையின் அடிப்பகுதியில் துளையிட்டு, மரத்தின் உள்பகுதியில் சென்று, மரத்தை நாசம் செய்யும். தேங்காய் விளைச்சல் கடும் பாதிப்படையும். மரம் வலுவிழந்து காலபோக்கில் காய்ந்துவிடும், என்றனர்.
இதுகுறித்து, வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், 'அண்மையில் இப்பகுதிகளில் வேளாண்மை மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு தீர்வும் தந்துள்ளனர். அதன்படி, இவ்வகை வண்டுகளை கட்டுப்படுத்த 'பக்கெட் டிராப்' முறையை பயன்படுத்தலாம். அதாவது சிவப்பு கூண் வண்டு கவர்ச்சி பொறி. இதற்கு ஒரு சிறிய அளவிலான பக்கெட் போதும். அதன் வெளிப்பகுதி கடினமாக வண்டுகள் பிடித்து ஏறும் வகையில் இருக்க வேண்டும். பக்கெட்டின் மூடிப்பகுதியில் வண்டுகளை கவரும், ஜெல்லியை கட்டி தொங்கவிட வேண்டும். அடிப்பகுதியில் தண்ணீர் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்ற வேண்டும். பக்கெட் மூடிக்கும், மூடும் பகுதிக்கு இடையில் வண்டுகள் உள்ளே செல்லுமாறு ஓட்டை இருக்க வேண்டும். இந்த கவர்ச்சி பொறியில் வண்டுகள் சிக்கிவிடும். இதுதொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றனர்.
---
