/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - திண்டுக்கல் மெமு ரயில் தொடர்ந்து இயக்க கோரிக்கை
/
கோவை - திண்டுக்கல் மெமு ரயில் தொடர்ந்து இயக்க கோரிக்கை
கோவை - திண்டுக்கல் மெமு ரயில் தொடர்ந்து இயக்க கோரிக்கை
கோவை - திண்டுக்கல் மெமு ரயில் தொடர்ந்து இயக்க கோரிக்கை
ADDED : நவ 02, 2024 11:17 PM
கோவை: பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவை - திண்டுக்கல் இடையேயான மெமு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. இந்த சேவை அக்., 30ம் தேதி முதல் வரும், 6ம் தேதி வரை (நவ., 3 தவிர) இயக்கப்படும்.
கோவை - திண்டுக்கல்(06106) ரயில் காலை 9:35 மணிக்கு புறப்பட்டு, மதியம், 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். திண்டுக்கல் - கோவை(06107) மெமு ரயில், திண்டுக்கலில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு, மாலை, 5:50 மணிக்கு கோவை வந்தடையும். எட்டு பெட்டிகள் கொண்ட இருந்த ரயிலில், 2,400 பயணிகள் பயணம் செய்யலாம்.
பயணிகள் யூ.டி.எஸ்., செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த ரயில், போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி ஆகிய இடங்களில் நின்று செல்லும். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வதன் வாயிலாக அங்கிருந்து திருச்சி, மதுரை மார்க்கமாக செல்லும் ரயில்களை பிடிப்பது எளிது. இதன் காரணமாக பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
அதுதவிர, தற்போது கந்தசஷ்டி விழா துவங்கியுள்ளதால், கோவை, ஊட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழநிக்கு பக்தர்கள் எளிதாக செல்ல முடியும். வரும் நாட்களில் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில்,''ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது, கோவை - திண்டுக்கல் இடையே ரயில் இயக்கப்பட்டது. அகல ரயில்பாதையாக மாற்றிய பிறகு தற்போது ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கும், பழநி செல்லும் பக்தர்களுக்கும் மிக வசதியாக உள்ளது. ரயிலை காலை, 7:00 மணிக்கு கோவையில் இருந்து புறம்படும்படி, இயக்கினால், பழனி செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். பழநியில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு மாலை திரும்ப உதவியாக இருக்கும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்,'' என்றார்.