/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - சத்தி ரோட்டில் புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுகிறது! ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கின...
/
கோவை - சத்தி ரோட்டில் புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுகிறது! ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கின...
கோவை - சத்தி ரோட்டில் புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுகிறது! ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கின...
கோவை - சத்தி ரோட்டில் புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுகிறது! ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கின...
ADDED : பிப் 25, 2025 11:51 PM

அன்னூர்; கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புறவழிச் சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கள ஆய்வு பணி நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், கோவில்பாளையம், அன்னுார், ஈரோடு மாவட்டத்தில், புளியம்பட்டி, சத்தி ஆகிய ஊர்களில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. தினமும் இந்த வழித்தடத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலை யாக விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் இப்பகுதி மக்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, ஏற்கனவே உள்ள கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2.5 கி. மீ., தள்ளி அதற்கு இணையாக புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
சில இடங்களில் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையில் இணைந்தும் மற்ற இடங்களில் புறவழிச் சாலையாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு 640 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களுக்கு 3ஏ நோட்டீஸ் தரப்பட்டது. எனினும் இரண்டு ஆண்டுகளாகியும் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கவில்லை. ஏற்கனவே தரப்பட்ட நோட்டீஸ் காலாவதி ஆனது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் முடங்கி இருந்தது.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தற்போது நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு விரைவில் 3 ஏ நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பிறகு பணி துவங்கும்,'' என்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை அல்லது ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கினால் 25 ஆண்டுகளாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த புறவழிச் சாலை கோவை முதல் சத்தியமங்கலம் வரை நான்கு வழிச்சாலையாகவும், அதன் பிறகு வனப்பகுதியில் இரு வழிச்சாலையாகவும் அமைய உள்ளது.
திண்டுக்கல்லில் துவங்கி பெங்களூர் வரை இந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு பல ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.