/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வேளாண் இயந்திரங்கள் இலங்கைக்கு ஏற்றுமதி; தொழில் அமைப்புகளுடன் நாகை நிர்வாகம் பேச்சு
/
கோவை வேளாண் இயந்திரங்கள் இலங்கைக்கு ஏற்றுமதி; தொழில் அமைப்புகளுடன் நாகை நிர்வாகம் பேச்சு
கோவை வேளாண் இயந்திரங்கள் இலங்கைக்கு ஏற்றுமதி; தொழில் அமைப்புகளுடன் நாகை நிர்வாகம் பேச்சு
கோவை வேளாண் இயந்திரங்கள் இலங்கைக்கு ஏற்றுமதி; தொழில் அமைப்புகளுடன் நாகை நிர்வாகம் பேச்சு
ADDED : மே 27, 2025 12:07 AM
கோவை; கோவையில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகம் வழியாக, இலங்கைக்கு வேளாண் இயந்திர உபகரணங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, மாவட்ட தொழில் மையம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில், தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடந்தது.
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் பிரதிநிதிகள், கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முகம் சிவா உள்ளிட்டோர் அடங்கிய குழு மற்றும் கோவை எம்.எஸ்.எம்.இ., தொழில் அமைப்புகள் இடையே, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிட்கோ, சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் (சியா) உள்ளிட்ட எம்.எஸ்.எம்.இ., அமைப்புகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் இருந்து இலங்கைக்கு உபகரணங்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
சியா தலைவர் தேவகுமார் கூறியதாவது:
நாகப்பட்டினம் துறைமுக வளர்ச்சியை மேம்படுத்தி, பொருளாதார மேம்பாட்டை எட்ட, அம்மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினத்தில் இருந்து, யாழ்ப்பாணம் துறைமுகத்துக்கு பொருட்கள் ஏற்றுமதியை, குறிப்பாக எம்.எஸ்.எம்.இ., உற்பத்தித் துறை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, கோவை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் பொருட்களை, குறிப்பாக வேளாண் இயந்திர உபகரணங்கள், உணவு பதனிடல் சார்ந்த உபகரணங்களை, அதிகம் ஏற்றுமதி செய்யக் கோரியுள்ளனர். அங்கு சந்தைப்படுத்த, அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்ய, நாகை மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.
இதற்காக, வாங்குவோர் - விற்போர் சந்திப்பையும் ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனர். மாவட்ட தொழில்மையம் வாயிலாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மிகக்குறைந்த போக்குவரத்து செலவினங்கள், சிப்பமிடலில் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்துள்ளனர். இலங்கைக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்வது போல், அங்கிருந்து பட்டை, மிளகு உள்ளிட்ட வாசனை திரவியங்களை இறக்குமதி செய்யவும், உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
நாகை துறைமுகம் வழியாக வர்த்தக வாய்ப்பை அதிகரிக்கும் இம்முயற்சியால், கோவை தொழில்நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இதுதொடர்பாக, அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.