/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக பயணிகளை கையாண்டு கோவை விமானநிலையம் சாதனை
/
அதிக பயணிகளை கையாண்டு கோவை விமானநிலையம் சாதனை
ADDED : டிச 04, 2024 11:01 PM

கோவை; ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை கையாண்டு, கோவை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.
மேற்கு மண்டலத்தில் உள்ள, ஒரே சர்வதேச விமானநிலையம் கோவையில் தான் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அக்., மாதம் முதல், தினமும், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரு நாட்களுக்கு முன் ஒரே நாளில் அதிகபட்சமாக, 64 விமான சேவைகள் வழங்கப்பட்டன. தலா, 28 உள்நாட்டு விமானங்கள், தலா நான்கு சர்வதேச விமானங்கள் வந்து சென்றன. இதில் தலா, 32 வருகை, புறப்பாடு அடங்கும். ஒரே நாளில், 1,136 சர்வதேசம், 9,389 உள்நாடு என, 10 ஆயிரத்து, 525 பயணிகள் வந்து, சென்றுள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளை ஒப்பிடுகையில் அதிகம்.
இண்டிகோ நிறுவனம் சென்னை - கோவை இடையே கூடுதல் விமானங்களை இயக்கியது, ஷிரிடிக்கு ஒரு நிறுத்த விமான சேவை உள்ளிட்ட காரணங்களால், விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.