/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
/
கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
UPDATED : பிப் 22, 2024 04:09 AM
ADDED : பிப் 22, 2024 02:39 AM

மேட்டுப்பாளையம்:கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பில்லுார் அணை, பவானி ஆறு விளங்குகிறது. கோவை மாநகராட்சி மற்றும் பல்லடம் வரை, வழியோர கிராமங்களுக்கு, பில்லுார் அணையிலிருந்து, நேரடியாக பில்லுார் 1, 2 குடிநீர் திட்டங்களுக்கு, நாளொன்றுக்கு, 25 கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி விரிவுபடுத்தியதை அடுத்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தொலைநோக்கு பார்வையுடன், 2048ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு, பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு, 17 கோடியே, 85 லட்சம் லிட்டர் நீர் எடுத்து சுத்திகரித்து, கோவை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.
மூன்று திட்டங்களுக்கும், நாள் ஒன்றுக்கு, 42 கோடியே, 85 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது.
பில்லுார் அணையின் மொத்த நீர்மட்டம், 100 அடி. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், இரு மாதங்களாக மழை பெய்யாததால், நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. தற்போது அணையில், 66 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர் எடுக்கும் கிணற்றில் உள்ள வால்வு வெளியே தெரிகிறது.
பில்லுார் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர், பவானி ஆற்றுக்கு வருகிறது. இந்த ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சி மற்றும் அன்னுார், அவிநாசி, சூலுார், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை வழியோர கிராமங்களுக்கு என, 19 கூட்டு குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த திட்டங்களுக்கு, உத்தேசமாக, தினமும், 20 கோடி லிட்டர் தண்ணீர், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.
தற்போது, பில்லுார் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் போது, மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.