ADDED : ஜூலை 19, 2025 12:23 AM

கோவை: கொடிசியா, மாவட்ட நிர்வாகம் சார்பில், 'கோவை புத்தகத் திருவிழா 2025' நேற்று துவங்கியது.
மூன்று அரங்குகளில் 320 கடைகள் இடம்பெற்றுள்ளன. 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து நிறுவனங்கள் பங்கேற்று, 2 லட்சம் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.
கண்காட்சியைத் துவக்கி வைத்து, எம்.பி., ராஜ்குமார் பேசுகையில், “புத்தகங்கள் நம்மை நல்ல இடத்துக்கு கொண்டு சேர்க்கும். படைப்பாளிகளிகள் பதிப்பாளர்களை நாம் ஊக்குவித்தால்தான் அவர்கள் தொடர்ந்து செயல்படுவர்; அடுத்த தலைமுறைக்கும் வாசிப்பு பழக்கம் கடத்தப்படும்,” என்றார்.
மேயர் ரங்கநாயகி பேசுகையில், “புத்தகம் வாசிப்பதால், புதிய பார்வை கிடைக்கும். புத்தகம் வாங்கிச் செல்லும்போது, புதிய சிந்தனையை வீட்டுக்கு கொண்டு செல்வதாக நினையுங்கள்,,” என்றார்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், “எல்லோரும் ஒரு புத்தகம் வாங்குவோம் என்ற உறுதியெடுத்தால், வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்படும்,” என்றார்.
நிகழ்ச்சியில், சிறந்த நூலாசியர்களுக்கான விருது, ப்ரியா (கவிதை), அலையாத்தி செந்தில் (புனைவு), வெண்பா (அபுனைவு) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டர், புத்தகக் கண்காட்சி தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சி காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும். அனுமதி இலவசம். தினமும் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன.