/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டண உயர்வை ரத்து செய்தது கோவை மாநகராட்சி
/
கட்டண உயர்வை ரத்து செய்தது கோவை மாநகராட்சி
ADDED : ஆக 01, 2025 08:03 AM
கோவை:
தமிழக அரசு மீது கோவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து, பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு, வைப்புத்தொகை கட்டணம் உயர்த்தியது; உள்விளையாட்டு அரங்கம் பயன்படுத்த கட்டணம் நிர்ணயித்தது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள், மாநகராட்சியில் நேற்று நடந்த கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டன.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான விதிகளை ஒழுங்குபடுத்துவதாக கூறி, தமிழக நகராட்சிகளின நிர்வாக இயக்குனர் ஒப்புதலுடன் துணை விதிகள் உருவாக்கப்பட்டன.
அவற்றை செயல்படுத்த மாமன்ற கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, கோவை மாநகராட்சியில், மே மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் 'ஆல்-பாஸ்' முறையில் தீர்மானங்களை நிறைவேற்றியதால், கட்டண உயர்வு குறித்து, கவுன்சிலர்கள் அறியவில்லை. இதன்பின், மாநகராட்சியில் இருந்து பாதாள சாக்கடை இணைப்புள்ள கட்டடங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆரம்பித்ததும், தமிழக அரசு மீது மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது.
கவுன்சிலர்கள் எதிர்ப்பு ஏனெனில், உதாரணத்துக்கு, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 100 வீடுகள் இருந்தால், 100 வீட்டு உரிமையாளர்களும் தனித்தனியாக மாநகராட்சிக்கு வைப்புத்தொகை செலுத்த வேண்டும்; மாதந்தோறும் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதே நடைமுறை குடிநீர் இணைப்புக்கும் பின்பற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'அரசு மீது மக்களிடம் அதிருப்தி ஏற்படுகிறது; தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வீடு வீடாகச் செல்ல முடியாது. அத்தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்' என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தீர்மானங்கள் ரத்து இச்சூழலில், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் மாநகராட்சியில் வரியினங்கள் உயர்த்தியிருப்பது தொடர்பாகவும் பேச ஆரம்பித்திருக்கிறார். இது, ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு கட்டணம் வசூலிப்பது தொடர்பான இரு தீர்மானங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கட்டட கழிவுகளை கொட்டுவதற்கு ஐந்து இடங்கள் தேர்வு செய்தது தொடர்பாகவும் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., (அ.தி.மு.க.,) ஜெயராம், ஆட்சேபனை தெரிவித்திருந்தார். மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கங்களை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கும் தீர்மானத்துக்கு அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவ்விரண்டு தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது.
இதோடு, 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.182.56 கோடியை, தமிழக அரசு மானியமாக வழங்க நிறைவேற்றிய தீர்மானமும் ரத்து செய்யப்பட்டது.