கோவை - தன்பாத் புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை இன்று தொடக்கம்
கோவை - தன்பாத் புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை இன்று தொடக்கம்
ADDED : ஆக 22, 2026 05:34 AM

சென்னை: 'ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து, கோவைக்கு புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை, இன்று தொடங்குகிறது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வந்தே பாரத்துக்கு இணையான வேகமும், பாதுகாப்பும் கொண்ட, அம்ரித் பாரத் ரயில், 'புஸ் புல்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்த ரயிலின் இரு புறமும், இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால், வந்தே பாரத்துக்கு இணையாக, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும். வந்தே பாரத் ரயிலைத் தொடர்ந்து, 'அம்ரித் பாரத்' ரயில்களுக்கும், பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பயணியர் கோரிக்கையை ஏற்று, தன்பாத்தில் இருந்து கோவைக்கு, அம்ரித் பாரத் வாராந்திர ரயில் இயக்க, கடந்த 10ம் தேதி, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே வாரியத்தின் உத்தரவின்பேரில், தன்பாத் - கோவை இடையே, புதிய வாராந்திர ரயில் சேவை, இன்று தொடங்கிறது.
இந்த ரயில் தமிழகத்தில், திருத்தணி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும். வாரந்தோறும் செவ்வாய்கிழமை, கோவையில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
