/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாமில் குறைகள் காலி! முதியோர் மகிழ்ச்சி
/
ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாமில் குறைகள் காலி! முதியோர் மகிழ்ச்சி
ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாமில் குறைகள் காலி! முதியோர் மகிழ்ச்சி
ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாமில் குறைகள் காலி! முதியோர் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2011 02:06 AM
கோவை : ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
ஓய்வூதியர்கள் அளித்திருந்த 150 புகார் மனுக்களில், பெரும்பாலான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதால், முதியோர் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர். அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, பென்ஷன் பெறுவது, வாரிசு பென்ஷன் பெறுவது, பெயர் விடுபடுவது உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் குறைதீர் கூட்டத்தில், பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுவது வழக்கம்.
குறை தீர்ப்பு கூட்டம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும். அதன்படி கூட்டத்துக்கு வருவதற்கு முன்பே தங்கள் குறைகளை ஓய்வூதியர்கள் இரண்டு நகல்கள் எடுத்து கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இக்குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் விளக்கம் கேட்டு, மூன்று வாரங்களில் தீர்வு அளிக்குமாறு அறிவுறுத்தப்படுவது வழக்கம். ஓய்வூதியர்களின் மனுக்களை தகுதியுடையவை, தகுதி இல்லாதவை என பிரித்து, குறை தீர்க்கும் கூட்டத்தில் விவாதிப்பது வழக்கம்.இதன்படி, நேற்றுமுன்தினம் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் பென்சன், ஓய்வூதியர்களின் மனுக்களை விசாரித்தார்.
மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்த குறைகள் குறித்து விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் வந்திருந்தனர். கருவூலத்துறை, கல்வித் துறை உள்ளிட்ட சில துறை அலுவலர்கள் இணை இயக்குனரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.கணக்குப் பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ''ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பான மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. துறையின் விளக்கம் தேவைப்படும் சில புகார்களுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் விளக்கம் பெற்று தீர்வு அளிக்கப்படுகிறது,''.''ஓய்வூதியர் குறைகள் தொடர்பாக கடந்த ஆண்டு 220 மனுக்கள் வந்தன.
குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதால், அதற்குப் பின் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் 90 மனுக்களே வந்தன. சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய குறை தீர்ப்பு கூட்டம் தள்ளிப் போனது,''.''அதனால் இந்த முறை 150 புகார் மனுக்கள் வந்தன. இவற்றில் பெரும்பாலான புகார்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டு விட்டது. துறை சார்ந்த விளக்கம் தேவைப்படும் சில மனுக்கள் மட்டும் மறு உத்தரவுக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.பெரும்பாலான புகார் மனுக்களுக்கு கூட்டத்தில் உடனடியாக தீர்வு அளிக்கப்பட்டதால், ஓய்வூதியர்கள் திருப்தியுடன் திரும்பிச் சென்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சசிகலா, தாசில்தார் முரளி ஆகியோர் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உதவினர்.