/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்ஷன்...ரியாக்ஷன் : முந்தைய கமிஷனர் சொன்னார் "கட்' "ஷூட்டிங்' தொடர்ந்தால் "வெரிகுட்'
/
ஆக்ஷன்...ரியாக்ஷன் : முந்தைய கமிஷனர் சொன்னார் "கட்' "ஷூட்டிங்' தொடர்ந்தால் "வெரிகுட்'
ஆக்ஷன்...ரியாக்ஷன் : முந்தைய கமிஷனர் சொன்னார் "கட்' "ஷூட்டிங்' தொடர்ந்தால் "வெரிகுட்'
ஆக்ஷன்...ரியாக்ஷன் : முந்தைய கமிஷனர் சொன்னார் "கட்' "ஷூட்டிங்' தொடர்ந்தால் "வெரிகுட்'
ADDED : ஆக 09, 2011 02:48 AM
கோவை : கோவை மாநகராட்சியின் முந்தைய கமிஷனரால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான பொறியாளர்கள் சிலர், நடவடிக்கையை ரத்து செய்ய 'அதிகார மையத்தில்' உள்ளவர்களை 'தாஜா' செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 'கோடிகளை' களத்தில் இறக்கி காத்திருக்கின்றனர். அதே வேளையில் நடவடிக்கையை ரத்து செய்தால், அதை எதிர்க்கவும் சில நேர்மையான அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.மாநகராட்சியின் முந்தைய கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, விதிமீறல்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வந்தார். மாநகராட்சித் திட்டப் பணிகளின் பெயரில் காசு பார்த்து வந்த ஒருசில பொறியாளர்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தார். அவரது குறுக்கீடுகள் காரணமாக திட்டப் பணிகளில் காசு பார்ப்பது சிரமமாக இருந்தது. ஆனாலும், விதிமுறை மீறி செயல்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட பொறியாளர்கள் முந்தைய கமிஷனரின் நடவடிக்கையில் இருந்து தப்பவில்லை.தரமற்ற முறையில் மாநகராட்சி திட்டப் பணிகளை முடித்த சில ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தார். இதன்படி, சுமார் 20 பொறியாளர்களின் ஐந்து இன்கிரிமென்டை 'கட்' செய்ய பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் அவர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஆக மாற்றப்பட்டார். புதிய கமிஷனர் ஆக பொன்னுசாமி என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
தங்களை ஒழுங்காக 'கடமையாற்ற' விடாமல் தடையாக இருந்த அன்சுல் மிஸ்ரா சென்று விட்டதால் பொறியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக, அதிகார மையத்தில் உள்ளவர்களை 'தாஜா' செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலா மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை, மொத்தம் ஐந்து கோடி ரூபாய் இந்த முயற்சியில் 'முதலீடு' செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முந்தைய கமிஷனரின் தண்டனை உத்தரவை ரத்து செய்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் அதிகார மையம் உள்ளது. தண்டனையை ரத்து செய்தால் முந்தைய கமிஷனர் எடுத்த நடவடிக்கைகள் தவறு என்றும், ஊழல் அதிகாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு துணை போனதாகவும் பெயர் வந்து விடும். மற்றொரு புறம், ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள பொறியாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தால், அதை எதிர்த்து உள்ளாட்சித் துறை அமைச்சர் முதல் முதல்வர் வரை புகார் கடிதம் அனுப்ப நேர்மையான சில அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிகளை ஏனோ தானோவென்று முடித்தவர்கள் மீது முந்தைய கமிஷனர் எடுத்த நடவடிக்கை நியாயமானது. சாதாரணமாக தண்டனை என்றால் ஓரிரண்டு இன்கிரிமென்டுகளை மட்டுமே 'கட்' செய்வர். ஆனால், ஐந்து இன்கிரிமென்ட் வரை 'கட்' செய்துள்ள நடவடிக்கையில் இருந்தே, ஊழலின் ஆழத்தை தெரிந்து கொள்ளலாம். நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்வது ஏன் என தெரியவில்லை. உடனடியாக, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால், நடவடிக்கை எடுக்க வைப்போம்,'' என்கின்றனர்.பொறியாளர்கள் செய்த 'முதலீடு' வீணாகுமா, முந்தைய கமிஷனரின் நடவடிக்கை பாழாகுமா என்பது அதிகாரத்தில் உள்ளவர்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையில்தான் உள்ளது.

