/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
/
பருவமழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
ADDED : ஆக 09, 2011 02:54 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பொள்ளாச்சி, உடுமலை தாலுகாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொப்பரை உலர்களம் உள்ளது.
கொப்பரை உற்பத்தி செய்வதற்காக உலர்களங்களுக்கு தினமும் 500 லோடு தேங்காய் (12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தேங்காய் வீதம்) கொண்டு வரப்படுகிறது.கொப்பரை உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, தினமும் இங்கிருந்து 75 லோடு (தலா 10 டன் வீதம்) கொப்பரை வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்வதால், கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தேங்காய் உடைத்தால் இரண்டு நாட்கள் வெயிலில் காய்ந்தால் தான், தொட்டியில் இருந்து பிரித்து எடுக்க முடியும். அதன்பின், தேங்காய் பருப்பை தொடர்ந்து நான்கு நாட்கள் உலர வைத்தால் தான் 6 சதவீத ஈரப்பதத்துடன் கொப்பரை உற்பத்தி செய்ய முடியும்.மழை பெய்வதால், தேங்காய் உடைப்பு தடைபட்டுள்ளது. மழை இல்லாத போது தேங்காய் உடைத்தாலும் உலர வைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. தேங்காய் பருப்பை உலர வைப்பதற்காக உலர்களத்தில் குவித்து வைக்கிறோம். மழை பெய்யாதபோது பரப்பி வைக்கிறோம். மழை பெய்யும் சூழல் உருவாகும் போது கொப்பரையை குவித்து தார்பாலின் கொண்டு போர்த்தி வைக்கிறோம். இதனால், கொப்பரை தரமும் குறைந்து விடுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க சில வியாபாரிகள் தேங்காயை காங்கேயம் கொண்டு சென்று கொப்பரை உற்பத்தி செய்தனர்.மழை காரணமாக, கொப்பரை உற்பத்தி தடைபட்டதால் பொள்ளாச்சி, உடுமலை தாலுகாவில் தினமும் 4.73 கோடி வர்த்தகம் தடைபட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 142 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது. இவ்வாறு, கொப்பரை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

